இலங்கை வரலாற்றில் இது முக்கியமான படிக்கல்! – சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடான சந்திப்பில் ரணில் தெரிவிப்பு.

கடன் நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது மற்றும் அனைத்து சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

“இலங்கை வரலாற்றில் இது முக்கியமான படிக்கல்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்துரைத்த ஜனாதிபதி,

“வீழ்ச்சியில் இருந்து மீள்வது, கடனைத் திருப்பிச் செலுத்த அவகாசம் பெறுவது மட்டுமன்றி, சமூக துறைகளைப் பாதுகாப்பது, வாழ்க்கை முறையின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவது என்பன முக்கியமாகும். அதனைவிட தற்போதைய நிலைமையில் பின்னடைவு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்வதும் முக்கியமானதாகும்.

சமூகக் கட்டமைப்பை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல், பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாத்தல் என்பவற்றை முன்னெடுக்கும் அதேநேரம் போட்டித் தன்மை மிகுந்த ஏற்றுமதியை அடிப்டையாகக்கொண்ட தொழில் துறையாக நாட்டை மேம்படுத்துவதை புதிய பொருளாதார யுகமாக கருதுகின்றோம்.

இதன் ஆரம்பம் கடிமானதாக இருக்கும், ஆனால் நாம் அதனையே பின்தொடர்ந்தால் எம்மால் இன்னும் முன்னேற முடியும். இப்போதைக்கு எது தேவையோ அதுவே எமது அர்ப்பணிப்பாக இருத்தல் வேண்டும்.

எனினும், இங்கு நாம் எமது இலக்கை அடைவதை மட்டும் குறிக்கோளாக கொண்டிராமல் அதற்கு அப்பாலும் செல்ல வேண்டும்.

ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்துக்கு நம்மை நாம் மாற்றிக்கொள்வோம். இது நமது சமூக சேவைகளை நிலைநிறுத்துவதை எளிதாக்கும்.

இலங்கை தனது கடன்களைக் குறைப்பதற்கும், முடிந்தால் கடன்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் இது ஒரு தொடக்கமாக இருக்க வேண்டும்” – என்றார்.

2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதிகளை 48 மாத காலப்பகுதிக்குள் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

முழுமையான பொருளாதார ஸ்திரத்தன்மையை மீள ஏற்படுத்துதல், கடன் நிலைத்தன்மையை மறுசீரமைத்தல், நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல், பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாத்தல், ஊழலை ஒழிப்பதற்குத் தேவையான கட்டமைப்பு மாற்றங்களை நோக்கி நகர்வதன் மூலம் இலங்கையை முன்னேற்றுதல் என்பன இந்தக் கடன் வசதியின் நோக்கமாகும்.

இணக்கப்பாட்டின் முக்கிய அம்சங்கள் :

நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் , அரச நிதி முகாமைத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம் ஊழலைக் குறைத்தல் மற்றும் வலுவான ஊழலுக்கு எதிரான சட்டக் கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல்.

சமூக நலனுக்கான செலவினங்களை அதிகரிப்பதன் மூலம் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு தற்போதைய நெருக்கடியின் தாக்கத்தை குறைத்தல், சமூக பாதுகாப்பு கட்டமைப்பு திட்டங்களினுடான பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் பயனாளிகளை துல்லியமாக அடையாளம் காணுதல்

அரச நிதியை நிலைப்படுத்த வருவாயை உயர்த்துதல், தனிநபர் வருமான வரியை மேம்படுத்த சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துதல், நிறுவன ரீதியான வருமான வரி மற்றும் VAT ஆகியவற்றின் நோக்கத்தை விரிவுபடுத்துதல், இந்த வரி சீர்திருத்தங்கள் ஊடாக 2024 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீத ஆரம்ப அதிகரிப்பை அடைவதை இலக்காகக் கொள்ளுதல்.

அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் அதிகரித்து வரும் நிதி அபாயத்தைக் குறைப்பதற்காக செலவுகளை மீளப்பெறும் வகையில் எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான கட்டணப் பொறி முறை ஒன்றை அறிமுகப்படுத்துதல்.

Leave A Reply

Your email address will not be published.