150 நாட்கள்.. 3570 கி.மீ பயணம்.. கன்னியாகுமரியில் இருந்து மிகப்பெரிய யாத்திரையை தொடங்கும் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியில் தலைமைக்கான பிரச்சனை நிலவி வரும் நிலையில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ என்ற மிகப்பெரிய யாத்திரையை புதன்கிழமை தொடங்க உள்ளார்.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்கும் வகையிலும், நாடு முழுவதும் பாஜகவிற்கு எதிராக மக்களை திரட்டும் விதமாகவும் நடத்தப்படும் இந்த யாத்திரையை இரண்டாவது உப்பு சத்தியாகிரகமாக கருதுகிறது காங்கிரஸ் கட்சி. அக்கட்சி நடத்தப்போகும் மிகப்பெரிய யாத்திரையாக பார்க்கப்படும் இதை, இன்று கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறார் ராகுல் காந்தி.

முன்னதாக, ஸ்ரீபெரும்புதூரில் தனது தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கிருந்து சென்னைக்கு காரில் வரும் அவர், விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டுச் செல்கிறார். திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு கார் மூலம் வரும் ராகுல் காந்தி, அங்கு பிற்பகல் 3 மணியளவில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் சிலை, காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் உள்ளிட்ட இடங்களிலும் மரியாதை செலுத்துகிறார்.

மாலை 4 மணிக்கு நடைபயணத்தை தொடங்கும் ராகுல் காந்தியிடம் தேசியக் கொடியை கொடுத்து, தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன்பிறகு மாலை 6 மணியளவில் காந்தி மண்டபம் அருகே நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார் ராகுல் காந்தி.

இரவு அகஸ்தீஸ்வரத்துச் செல்லும் ராகுல் காந்தி, அங்குள்ள விவேகானந்தர் கல்லூரியில் தங்கவுள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3 ஆயிரத்து 570 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் இந்த யாத்திரையை அவர் நடந்தே கடக்க உள்ளார். ஒவ்வொரு 30 கிலோ மீட்டர் தூரத்திற்கும் ராகுல் காந்தியுடன் 50 ஆயிரம் பேர் உடன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் சூழலில், 150 நாட்கள் யாத்திரை நடைபெற உள்ளது.

நாள்தோறும் காலை 7 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரையும் நடைபெறும் பயணம், தமிழ்நாட்டில் மட்டும் 4 நாட்களுக்கு நடைபெற உள்ளது. நாள்தோறும் 20 முதல் 30 கிலோ மீட்டர் தூரம் வரை யாத்திரையை நடத்த உள்ள ராகுல் காந்தி, மற்ற நேரங்களில் அந்தந்த பகுதி மக்களையும் சந்திக்க உள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த பாரத் ஜோடோ யாத்திரைக்காக, படுக்கையறை, சமையலறை, குளியலறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய 60 கேரவன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ராகுல் காந்தியும் பாத யாத்திரை குழுவினரும் எங்கெல்லாம் இரவு தங்குகிறார்களோ, அங்கு இந்த கேரவன்களை நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.