இலங்கையை மிரட்டுவதை உடன் நிறுத்துங்கள்! – சர்வதேச மனித உரிமை அமைப்புக்களிடம் அரசு வலியுறுத்து.

“சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிட்டு இலங்கையை மிரட்டுவதை உடன் நிறுத்த வேண்டும்.”

இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க.

ஜெனிவாவில் இலங்கை மீது வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நமக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளன.
சர்வதேச மன்னிப்புசபை, ஃபோரம் ஏசியா, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணைக்குழு ஆகியவையே இவ்வாறு வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை மீது வெளியில் இருப்போர் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது. எமது நாடு இறைமையுள்ள நாடு.

சர்வதேச தீர்மானங்களையோ அல்லது சர்வதேச சட்டங்களையோ இலங்கை மீது பிரயோகிக்க முடியாது.

இங்கு பிரச்சினைகள், குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அது தொடர்பில் உள்ளகப் பொறிமுறையூடாகத்தான் ஆராய்ந்து பார்க்க முடியும்.

உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளியகப் பொறிமுறை அவசியமில்லை. அதை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.