ஆட்சிப்பீடம் ஏறினால் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு! – சஜித் உறுதி.

“நாடு எதிர்கொண்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பொதுத்தேர்தல் ஊடாகவே தீர்வைக்காண முடியும். ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் ஆணையுடன் ஆட்சியமைத்தால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வு கண்டே தீரும்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியால் அமுல்படுத்தப்படும் ‘மூச்சு’ வேலைத்திட்டத்தின் 52 ஆவது கட்டமாக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“74 ஆண்டுகால அரசியல் குறித்து மக்கள் மத்தியில் நிலவும் விரக்தி நியாயமானதுதான். இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்தவாறு அரசை மட்டும் விமர்சிக்காமல், மக்களை வாழவைக்கவும், எதிர்காலச் சந்ததியினரின் கல்விக்கான வாய்ப்புக்களை விரிவுபடுத்தவும் நடவடிக்கைளை முடிந்தவரை எடுத்து வருகின்றது.

நாட்டின் குடிமக்களை வாழ வைப்பது எம் மீது சுமத்தப்பட்ட சமூகக் கடமை.

நாடு நெருக்கடியான சூழலை எதிர்நோக்கி வரும் இந்நேரத்தில் அமைச்சுக்களைப் பெற்று மக்களுக்கு மேலும் சுமைகளை அதிகரிப்பதை விடுத்து, எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நாட்டு மக்களுக்கு வழங்க முடியுமான உயர்ந்தபட்ச உதவிகளை வழங்குகின்றோம்.

நாட்டின் வைத்தியசாலைக் கட்டமைப்பு நெருக்கடியை எதிர்நோக்கும் இத்தருணத்தில், ‘மூச்சு’ வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களின் உயிரைக் காக்க எதிர்க்கட்சியாக நானும், சக நாடாளுமன்ற உறுப்பினர் குழுவும் எப்போதும் முன் நிற்கின்றோம்.

தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருந்தபோது நாட்டைக் கட்டியெழுப்ப உதவுமாறு கேட்ட சந்தர்ப்பத்தில் பதவிகளை எடுக்காமல் சுகாதாரம் ,கல்வித்துறைகளை கட்டியெழுப்ப உதவுவதாக நன் உறுதியளித்தேன்.

சுகாதாரத் துறைக்கு மூச்சுத் திட்டமும், கல்வித் துறைக்கு பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்பத் திட்டமும் தொடங்கப்பட்டு, இதனூடாக எதிர்க்கட்சி என்ற ரீதியிலும் எமது கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுகின்றோம்.

அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தைச் சுகாதாரத்துறைக்குப் பயன்படுத்துவதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும்.

ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக, குறைந்த செலவில் அதிக வேலைகளைச் செய்து தமது சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதையே இந்நேரத்தில் மேற்கொண்டு வருகின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.