மாயமான இளைஞர்..கால்வாயில் கிடந்த பைக்.. வீட்டினுள் புதைக்கப்பட்ட சடலம் – பாபநாசம் பட பாணியில் அரங்கேறிய கொலை

கேரளாவில் பாபநாசம் பட பாணியில் கொடூர கொலை, வீட்டிற்குள் கொன்று புதைக்கப்பட்ட இளைஞரின் சடலம்.

கேரளா மாநிலம் ஆலுவா பகுதியை சார்ந்தவர் 43 வயதான பிந்து குமார். இவரை கடந்த 26 ஆம் தேதி முதல் காணவில்லை ,எங்கு தேடியும் கிடைக்காததால் இவரது குடும்பத்தார் பிந்து குமாரை காணவில்லை என எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரைத் தொடர்ந்து போலீசாரும் இவரை தேடி வந்துள்ளனர்.மேலும் இவரது செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்து வந்தனர்.

இந்நிலையில் பிந்து குமாருக்கு சொந்தமான பைக் ஒன்று கொட்டாரக்கடவு பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதேப் பகுதியில் இவரையும் தேடி வந்துள்ளனர். பின்னர் இவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்வதில் சங்கனாச்சேரி பகுதியை சார்ந்த முத்துக்குமார் என்பவர் கடைசியாக பேசியதும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து முத்துக்குமாரை செல்போனில் தொடர்பு கொள்ள போலீசார் முயன்றுள்ளனர் ஆனால் முத்துக்குமாரின் செல்போனுக்கு கால் செல்லவில்லை. போலீசார் முத்துக்குமாரை தேடி அவரது வீட்டிற்கு சென்றபோது முத்துக்குமார் குடும்பத்தாருடன் கடந்த ஒரு மாதமாக வெளியூர் சென்றுள்ளதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.

இதற்கிடையே வீட்டை சுற்றி பரிசோதனை செய்த போலீசாருக்கு வீட்டின் முன்புறத்தில் சமீபத்தில் குழி ஒன்று தோண்டியுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பகுதியில் தோண்டியபோது – உடலை புதைத்து விட்டு துர்நாற்றம் வெளியே வராமல் இருக்க அதற்கு மேல் கான்கிரீட் போட்டு அதற்கு மேல் மீண்டும் மண்ணை நிரப்பி உள்ளதும் தெரிய வந்தது.

இதையடுத்து அந்த கான்க்ரீட்டை உடைத்த போலீசார் உள்ளே பார்த்தபோது அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது. தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் பிந்து குமாரின் உறவினர்களை அழைத்து அடையாளம் கண்டு மேலும் டிஎன்ஏ பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் முத்துக்குமாரையும் அவரது குடும்பத்தாரையும் போலீசார் தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த முத்துக்குமாரை போலீசார் இன்று கைது செய்தனர்.

கொலைக்கான காரணம் என்ன. முத்துக்குமார் தான் கொலை செய்தாரா எந்த கோணங்களில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பாபநாசம் பட பாணியில் ஒருவரை கொன்று அவரது வாகனத்தை கால்வாயில் மூழ்கடித்து பின்னர் வீட்டிற்குள் அவரது உடலை புதைத்து சிமெண்ட் கலவையால் மூடிய இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.