இந்தியப் பல்கலை விவகாரம்: இணைந்த வளாகமாக்க அதிகாரமில்லை; இணைந்த நடவடிக்கை எப்போதும் தயார்! – துணைவேந்தர் தெரிவிப்பு.

“வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் இணைந்த வளாகமாக்கும் உடன்படிக்கைக்கு துணைவேந்தருக்கு அதிகாரமில்லை. ஆனால், ஆய்வு மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கான இணைந்த நடவடிக்கைகள் பல்கலைக்கழகத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அதற்கு நாம் எப்போதும் தயார். எமது சமூகத்துக்கும் நன்மை பயக்கும் எந்தவிதமான திட்டத்துக்கு தயக்கம் காட்டப்போவதில்லை.”

இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார்.

‘இந்தியன் இன்ஸ்ரியூட் ஒப்ரெக்னோலஜி’ உடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழம் உடன்பாடு மேற்கொள்வதில் தயக்கம் காட்டுவது தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் ஊடகங்கள் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“குறிப்பிட்ட உடன்படிக்கை (இந்தியப் பல்கலைக்கழகம்) தொடர்பில் மின்னஞ்சல் கிடைத்தவுடன் அதனை உடனடியாக முடிவெடுத்துப் பதிலளிக்கும் அதிகாரம் துணைவேந்தருக்குரியதல்ல.

கல்விசார் முடிவுகளை இயற்றும் அதிகாரமுடைய மூதவையும், அதன் பரிந்துரைகளை ஆராய்ந்து இற்றைப்படுத்தும் – ஆளும் அதிகாரமுள்ள பேரவையுமே இவற்றுக்கான தீர்மானத்தை இயற்ற முடியும்.

தவிர குறித்த விடயத்துடன் சம்பந்தப்பட்ட பீடத்தின் பீடாதிபதி குறித்த முன்மொழிவை வரவேற்று, அதற்கான சாத்தியப்பாடுகள் குறித்த நிலைப்பாட்டை தூதரக அதிகாரிகளுக்குப் பதிலளித்துள்ளார்.

தவிர இலங்கையிலுள்ள பல்கலைக்கழக கட்டமைப்பின்படி அரச நிர்வாக்கக் கட்டமைப்பினூடாக கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினூடாக வரும் எந்த முன்மொழிவுக்கும் நாங்கள் தயக்கம் காட்டப்போவதில்லை. அவ்வாறு வராத எந்தத் திட்டத்தையும் நாம் முன்னெடுக்க முடியாது.

எமது சமூகத்துக்கு முறையாகக் கிடைக்கும் எந்த நன்மையையும் தட்டிக் கழிக்கப் போவதில்லை.

எந்தத் தூதரகமோ, எந்த சேவை நோக்குடைய நிறுவனங்களோ முறையான வழிமுறைகளினூடாக தமது முன்மொழிவுகளைத் தந்தாலும் அவற்றை அந்தந்த துறைகளின் ஊடாக வழக்கமான நடைமுறைகளுனூடாகப் பெற்றுக் கொள்வது வழமை.

சீனத் தூதுவரின் புலமைப் பரிசில் கூட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினூடாக 2016 ஆம் ஆண்டுலிருந்து இலங்கையிலுள்ள சகல பல்கலைக்கழகங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. இம்முறை அந்தத் திட்டத்துக்குப் பொறுப்பானவர்களே அந்த உதவியை சீனத் தூதரகத்தில் பெற ஏற்பாடாகியிருந்தது.

தேசிய பரீட்சைக் கடமைகளுக்காக கொழும்பு சென்றிருந்த நான், அன்றைய தினம் அங்கு செல்லக் கூடிய நிலையில் இருந்ததால் – எமது அலுவலர்களின் அழைப்பின் பேரிலேயே அவர்களுடன் சென்றேன். இதனை அரசியலாகப் பார்ப்பது எனக்கு ஆச்சரியமளிக்கின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.