மதமாற்ற நிகழ்வில் பங்கேற்றதால் ஏற்பட்ட சர்ச்சை.. பாஜக அழுத்தத்தால் ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா!

டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் அக்கட்சியை சேர்ந்த ராஜேந்திர பால் கவுதம் சமூக நலத்துறை, கூட்டுறவுத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஆகியவற்றின் அமைச்சராக இருந்தார்.

இவர் கடந்த 5 நாள்களாக பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அக்டோபர் 5ஆம் தேதி டெல்லியில் புத்த மத விழா நிகழ்வு நடைபெற்றது. இதில் 10,000க்கும் மேற்பட்டோர் புத்த மதத்தை தழுவியுள்ளனர். இந்த மத நிகழ்வானது அமைச்சர் ராஜேந்திர பால் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்றவர்கள் புத்த மதத்தை தழுவி இந்து மத நம்பிக்கை, சடங்குகளுக்கு எதிராக அம்பேத்கர் எடுத்துக்கொண்ட 22 உறுதிமொழிகளை கூறினர். 1956ஆம் ஆண்டு இந்து மதத்தை துறந்து புத்த மதத்தை தழுவிய அம்பேத்கர் இந்து தெய்வங்களை நம்ப மாட்டேன், அந்த தெய்வங்களை வணங்கமாட்டேன்; இந்து மதத்தின் சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்ற மாட்டேன் போன்ற 22 உறுதி மொழிகளை கூறி மதம் மாறிக்கொண்டார்.

அதை பின்பற்றியே டெல்லியில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அமைச்சர் ராஜேந்திர பால் முன்னிலையில் நடைபெற்ற இந்த உறுதி மொழி ஏற்பு காணொலி சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி இந்துக்களை புண்படுத்தும் விதமாகவே இந்த செயலை செய்துள்ளது என பாஜக தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவால், அமைச்சர் ராஜேந்திர பால் ஆகியோர் இந்து விரோத செயல்களை செய்து வருவதாக தொடர் அழுத்தத்தை பாஜக செய்துவந்தனர். மேலும், குஜராத் மாநிலத்தில் கேஜ்ரிவால் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், கேஜ்ரிவால் ஒரு இந்து விரோதி என பாஜக சார்பில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டன.

பாஜகவின் தொடர் அழுத்தத்தை அடுத்து ராஜேந்திர பால் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நான் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தவில்லை. ஆம் ஆத்மி மக்களுக்காக உழைக்கும் கட்சி. கட்சி எனக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. முதலமைச்சர் குஜராத்தில் உள்ளார். எனவே, அவருக்கு கடிதம் மூலம் ராஜினாமா செய்வதை தெரிவித்துள்ளேன். நான் ஒரு தேச பக்தன், அம்பேத்கரை பின்பற்றுபவன் என்றார்.

மேலும் அவர், மேற்கண்ட நிகழ்வுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் தனிப்பட்ட முறையில் அந்த நிகழ்வுக்கு சென்றேன். ஆனால், பாஜகவின் எனக்கு தொடர் அச்சுறுத்தல்களை தருகின்றார்கள். எனது கட்சிக்கும் முதலமைச்சருக்கும் களங்கம் விளைவிக்கின்றார்கள். நான் அதற்கு அஞ்சவில்லை. நான் அம்பேத்கர் மற்றும் புத்தர் காட்டிய வழியில் வாழ்பவன் என்றுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.