தேசிய ஒற்றுமைக்கான பயணத்திலும் ஒன்றுபடுவோம்! – கரு அழைப்பு.

“சிங்களத் தலைவர்கள், தமிழ் தலைவர்கள், முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துதான் வெள்ளையர்களிடமிருந்து எமது நாட்டை மீட்டெடுத்தோம். அதேபோல் தேசிய ஒற்றுமைக்கான பயணத்திலும் நாங்கள் அனைவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும்.”

இவ்வாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தினார்.

சூரிய கற்கை நிறுவகத்தில் இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியை வடபகுதியில் கல்வி கற்று பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சுதுமலை பகுதியில் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாம் எந்த இனத்தவராகவும் எந்த மதத்தவராகவும் இருக்கலாம். எமக்குப் பிறப்பிலேயே கிடைத்ததுதான் மதமும் இனமுமே தவிர நாங்கள் கேட்டு வந்த வரம் அல்ல. அந்தக் கருத்து, அந்த எண்ணம் எங்களுக்கு இருக்குமாயின் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ முடியும்.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் பிறந்தவன் என்ற வகையிலும், இலங்கை சுதந்திரம் அடைந்த அன்று தேசியக் கொடியை கையால் ஏந்திச் சென்றவன் என்ற வகையிலும் எனக்கு அந்த உரிமையும் அந்தக் கடப்பாடும் இருக்கின்றது.

சிங்களத் தலைவர்கள், தமிழ்த் தலைவர்கள், முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துதான் வெள்ளையர்களிடமிருந்து எமது நாட்டை மீட்டெடுத்தோம். அதேபோல் தேசிய ஒற்றுமைக்கான பயணத்திலும் நாங்கள் அனைவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும். அப்போதுதான் எங்களால் ஒன்றாக வாழ முடியும். அதேவேளை, எங்களுடைய நாட்டையும் நாங்கள் கட்டியெழுப்ப முடியும்.

இன்று எமது நாடு இந்த நிலைக்குச் சென்று இருப்பதற்கான பிரதான காரணம் ஒற்றுமையின்மையும் ஐக்கியமின்மையும் ஆகும். ஒருவரை ஒருவர் வன்மம் கொண்டு ஒருவருடன் ஒருவர் போராடி உயிர்கள் இழந்து, சொத்துக்கள் இழந்து இறுதியில் எங்களுக்குக் கிடைத்தது என்ன?

1948 ஆம் ஆண்டு நாங்கள் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டபோது தெற்காசியாவிலேயே இரண்டாவது செல்வந்த நாடாகக் காணப்பட்டோம். அதனால்தான் கூறுகின்றோம் இந்த ஐக்கியமின்மையும், இந்த நல்லிணக்கமின்மையும் இந்தத் துரதிர்ஷ்டவசமான செயற்பாடுகளுக்கு காரணமாகும்.

நாங்கள் ஐக்கியத்துடனும் நல்லிணக்கத்துடனும் செயற்பட வேண்டும். நான் தென்னிலங்கை நோக்கி பெரிய எதிர்பார்ப்புடன் செல்கின்றேன். நான் யாழ்ப்பாணத்தில் தங்கி நின்ற இரு நாள்களும் கூறியது என்னவெனில் சுபீட்சமான எதிர்காலம் உருவாக வேண்டும் என்பதேயாகும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.