தெளிவத்தை ஜோசப் அவர்கள் காலமானார்

தெளிவத்தை ஜோசப் அவர்கள் இன்று (21) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 88.

இலங்கையின் மூத்த எழுத்தாளர் சாகித்தியரத்னா தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப்) சுகவீனம் காரணமாக இன்று காலமானார்.
கடந்த சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார்.

 

தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப், பிறப்பு: பெப்ரவரி 16, 1934) ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் ஆவார். இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர்.

தெளிவத்தை ஜோசப் இலங்கையின் மலையகத்தில் பதுளை மாவட்டம், ஹாலி எல்ல இற்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் பிறந்தார். மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு மீண்டும் இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். இவர் ஆரம்பத்தில் தெளிவத்தை என்னும் தோட்டத்தில் ஆசிரியராக இருந்தவர். இதன் காரணமாகவே தனது பெயருடன் தெளிவத்தையையும் இணைத்துக் கொண்டார்.

காலங்கள் சாவதில்லை என்பது இவருடைய முக்கியமான நாவல். நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்திய விருது பெற்றுள்ளார். இவரது குடை நிழல் என்ற புதின நூல் 2010 ஆம் ஆண்டுக்கான யாழ் இலக்கிய வட்டம் – இலங்கை இலக்கியப் பேரவை விருதைப் பெற்றுள்ளது.

தெளிவத்தை ஜோசப் 2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதைப் பெற்றார்.

இங்கே உங்கள் அஞ்சலியை பதிவு செய்யலாம்
மரண அறிவித்தல் மற்றும் அஞ்சலிக்காக ….

Leave A Reply

Your email address will not be published.