இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் புதிய அரசமைப்பே உடன் வேண்டும் திருத்தச் சட்டங்கள் ஏமாற்றும் செயல்.

“நாட்டின் பொருளாதார மற்றும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், பொருத்தமான அம்சங்களை உள்ளடக்கிய, புதிய அரசமைப்பு உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். அதைவிடுத்துப் பழைய அரசமைப்பில் தொடர்ந்து திருத்தங்களை மேற்கொள்வது நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும்.”

இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று, அரசமைப்பின் 22ஆம் திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றத்தில் இதுவரை திருத்தம் செய்யப்பட்ட அனைத்து திருத்தங்களுக்கும் எவ்வித வேறுபாடுமின்றி ஆதரவாக வாக்களித்தவர்கள் இன்றும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர்.

அதேவேளை, ஒரு திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்து, அதே திருத்தத்துக்கு எதிராகவும் வாக்களிக்கும் வேடிக்கையான மனிதர்களும் இந்த நாடாளுமன்றத்தில் உள்ளனர்.

20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் பெரும்பாலான சிரேஷ்ட அரசியல்வாதிகள் தற்போது 22ஆவது திருத்தமே இறுதித் தீர்வு எனப் புகழ் பாடுகின்றார்கள்.

ஜனநாயகத்தைப் பாதுகாத்து தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பொருத்தமான அம்சங்களை உள்ளடக்கிய வகையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.