பெண்ணை முழுமையாக விழுங்கிய மலைப்பாம்பு!

இந்தோனேசியாவின் ஜம்பி மாகாணத்தில் பெண் ஒருவரை மலைப்பாம்பு கொன்று முழுவதுமாக விழுங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த பெண் 50 வயதான ஜஹ்ரா என்ற இறப்பர் பால் வியாபாரி ஆவார், அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இறப்பர் தோட்டத்திற்கு பால் எடுக்கச் சென்றுள்ளார். அன்று இரவு வரை அவர் திரும்பி வராததால், அவரைக் கண்டுபிடிக்க தேடுதல் குழுக்கள் அனுப்பப்பட்டன.

ஒரு நாள் கழித்து, கிராமவாசிகள் பெரிய வயிற்றுடன் மலைப்பாம்பு ஒன்றைக் கண்டனர். பாம்பு மீது சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், பாம்பை கொன்று பார்த்தபோது, ​​பாம்பின் வயிற்றில் குறித்த பெண் பிணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
“பாம்பின் வயிற்றில் காணாமற்போன பெண் கண்டுபிடிக்கப்பட்டார்” என்று பெட்டாரா ஜம்பி காவல்துறை தலைவர் ஏகேபி எஸ் ஹரேஃபா உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, அவரது உடல் பெரும்பாலும் அப்படியே காணப்பட்டது. குறித்த பெண்ணின் கணவர் ஞாயிற்றுக்கிழமை இரவு இறப்பர் தோட்டத்தில் அவரது ஆடைகள் மற்றும் கருவிகள் சிலவற்றைக் கண்டெடுத்ததாகவும், அதன் பிரகாரம் தேடுதல் குழுவை அழைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் காவல்துறை மா அதிபர் கூறியுள்ளார்.

இந்த மலைப்பாம்பு குறைந்தது 5 மீட்டர் (16 அடி) நீளம் இருந்திருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் அரிதாக நடந்தாலும், இந்தோனேசியாவில் மலைப்பாம்பால் ஒருவர் தாக்கப்படுவது இது முதல் முறை அல்ல. 2017 மற்றும் 2018 க்கு இடையில் நாட்டில் இதேபோன்ற இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.