வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களையும் ஐ.நாவிடம் ஒப்படைக்குக!

வியட்நாம் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் 303 பேரையும் ஐ.நாவிடம் ஒப்படைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (09) சில வரி திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த சில நாட்களுக்கு முன்னர் வியட்நாம் கடற்பரப்பில் 303 இலங்கையர்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட விடயங்களால் அவர்கள் இங்கிருந்து சென்றுள்ளனர்.

மனிதாபிமான அடிப்படையில் அவர்களை ஐ.நாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

264 ஆண்களும், 19 பெண்களும், 20 சிறுவர்களும் அடங்கலாக 303 பேர் அங்குள்ளனர். ஜனாதிபதி நினைத்தால் அவர்களை ஐ.நாவிடம் பாரப்படுத்த முடியும். இதனை மிகவும் விநயமாக அவரைக் கேட்கின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.