நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்… மோசடி கும்பல் கைது…!
நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு வந்த மோசடி கும்பலை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. இந்த மோசடி வழக்கு தொடர்பாக, எய்ம்ஸ் மருத்துவ மாணவர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 7ம் தேதி நடைபெற்றது. சரியாக 499 நகரங்களில் நடைபெற்ற இத்தேர்வில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க, பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. பலகட்ட சோதனைக்குப் பிறகே, தேர்வறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடிகள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. ஆள்மாறாட்டம் செய்த மோசடிக் கும்பலை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு பதிலாக வேறு ஆட்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்தது தற்போது தெரிய வந்துள்ளது. இதற்காக , பல லட்சங்கள் கைமாறியிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.
நீட் தேர்வில் முறைகேடுகளும், மோசடிகளும் நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாட்டில் கடந்த 2019-20ஆம் ஆண்டில் நீட் தேர்வில் 10 மாணவர்கள் ஆள் மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2021ம் ஆண்டு டெல்லியிலும், ஜார்க்கண்டிலும் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடிகள் நடைபெற்றது தெரிய வந்தது.