உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்பு !

புதுதில்லி: உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பி.ஆர். கவாய்க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில், குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் பல மத்திய அமைச்சர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகள் மற்றும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக 2024 ஆம் ஆண்டு நவம்பா் 11-ஆம் தேதி பதவியேற்ற சஞ்சீவ் கன்னா, மே 13-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளதை, தனக்குப் பின் மிக மூத்த நீதிபதியான பி.ஆா்.கவாயை (பூஷண் ராமகிருஷ்ண கவாய்), அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க ஏப்ரல் 20 ஆம் தேதி சட்ட அமைச்சகத்துக்கு சஞ்சீவ் கன்னா பரிந்துரை கடிதம் அனுப்பினார்.
மத்திய அரசின் ஒப்புதலுக்கு பிறகு, உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக மே 14-ஆம் தேதி பி.ஆா்.கவாய் பதவியேற்றா. இவா், வரும் நவம்பா் 23-ஆம் தேதி பணி ஓய்வு பெறும் வரை சுமாா் 6 மாதங்களுக்கு இந்த பதவியை வகிப்பாா். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65 என்பது குறிப்பிடத்தக்கது.
2007 மற்றும் 2010-க்கு இடையில் பணியாற்றிய நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இந்தியாவின் இரண்டாவது தலைமை நீதிபதி நீதிபதி கவாய் ஆவார்.
மகாராஷ்டிரம் மாநிலம், அமராவதியில் 1960, நவம்பா் 24-இல் பிறந்தவரான பி.ஆா். கவாய், கடந்த 1985, மார்ச் 16-இல் வழக்குரைஞராக பதிவு செய்தாா். மும்பை உயா்நீதிமன்றத்தின் நாகபுரி கிளையில் கடந்த 1992-1993 காலகட்டத்தில் அரசுத் தரப்பு உதவி வழக்குரைஞராக பணியாற்றிய இவா், 2000-இல் அரசுத் தரப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டாா்.
யுபிஎஸ்சி தலைவராக அஜய் குமார் நியமனம்!
கடந்த 2003 நவம்பர் 14 ஆம் தேதி மும்பை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2005 நவம்பர் 12-இல் நிரந்தர நீதிபதியாகவும் பதவியேற்றாா். கடந்த 2019, மே 24-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியானாா்.
உச்சநீதிமன்றத்தால் திருப்புமுனையான தீா்ப்புகள் வழங்கப்பட்ட பல்வேறு அரசியல் சாசன அமா்வுகளில் கவாய் அங்கம் வகித்துள்ளாா்.
அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு (ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து) ரத்து நடவடிக்கையை கடந்த 2023-இல் ஒருமனதாக உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வில் இவா் இடம்பெற்றிருந்தாா்.
கவாய் உள்பட 5 நீதிபதிகள் அடங்கிய மற்றொரு அரசியல் சாசன அமா்வுதான், அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்கான தோ்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்து தீா்ப்பளித்தது.
கடந்த 2016-இல் அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறுவதற்காக மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை 4:1 என்ற பெரும்பான்மை தீா்ப்பின் மூலம் அங்கீகரித்த உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமா்விலும் கவாய் அங்கம் வகித்தாா்.
சட்டவிரோத கட்டடங்களின் இடிப்பு தொடா்பான வழக்கில், ‘சம்பந்தப்பட்டவா்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் அளிக்காமல் கட்டட இடிப்பு நடவடிக்கையை கூடாது; அவா்கள் பதிலளிக்க 15 நாள்கள் அவகாசம் வழங்க வேண்டும்’ என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்பை கவாய் தலைமையிலான அமா்வு கடந்த ஆண்டு வழங்கியது.
வனங்கள், வன உயிரினங்கள், மரங்களின் பாதுகாப்பு தொடா்புடைய வழக்குகள், நீதிபதி கவாய் தலைமையிலான அமா்வால் விசாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.