ஆபரேஷன் சிந்தூருக்கு பின் இந்திய பாதுகாப்பு நிதி ரூ.50,000 கோடி உயர்வு

ஆபரேஷன் சிந்தூருக்கு பின், இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் ரூ.50,000 கோடி அதிகரிக்கவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த கூடுதல் நிதி பட்ஜெட் மூலம் வழங்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் மொத்த பாதுகாப்பு நிதி ரூ.7 லட்சம் கோடியை கடந்துவிடும் எனவும் கூறப்படுகிறது.
2025-26 ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஏற்கனவே ரூ.6.81 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது, இது கடந்த ஆண்டை விட 9.2 சதவீதம் அதிகமாகும்.
புதிய நிதி ஆய்வு மற்றும் மேம்பாடு, ஆயுதங்கள், ராணுவ உபகரணங்கள் வாங்குவதற்காக பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
2014-ல் மோடி அரசு ஆட்சி ஏற்கும்போது பாதுகாப்பு துறை பட்ஜெட் 2.29 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது.
தற்போது, இது மத்திய அரசின் உயர்ந்த பட்ஜெட் ஒதுக்கீடாக விளங்குகிறது. இது மொத்த மத்திய பட்ஜெட்டின் 13 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ இந்திய இராணுவத்தின் திறமையான நடவடிக்கைகளையும், அதிநவீன வான் பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும் வெளிக்கொணர்ந்தது. இதில் ‘ஆகாஷ்’ ஏவுகணை மற்றும் புதிய ‘பார்கவஸ்த்ரா’ ட்ரோன் தற்காப்பு அமைப்புகள் குறிப்பிடத்தக்கவை.
சமீபத்தில், பார்கவஸ்த்ரா அமைப்பு, ஓடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா மேற்கொண்ட நேரடி தாக்குதலுக்கு பதிலளிக்க பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது. அவை பெரும்பாலும் ஆகாஷ் மற்றும் ரஷ்யா தயாரித்த S-400 போன்ற பாதுகாப்பு அமைப்புகளால் தடுக்கப்பட்டன.