பெங்களூருவில் 9 மாதக் குழந்தைக்கு கரோனா தொற்று!

கர்நாடகத்தின் பெங்களூருவில் 9 மாதக் குழந்தைக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

உலகையை அச்சுறுத்திய கரோனா வைரஸ் தொற்று மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற பகுதிகளில் கரோனாவின் புதிய மாறுபாடான ஜெஎன்1 என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது.

அந்தவகையில், கர்நாடகத்தில் மே மாதம் தொடங்கியதிலிருந்து கரோனா தொற்று மெல்ல அதிகரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுகாதாரத்துறை தரவுகளின்படி, ஜனவரியில் மூன்று பேருக்கும், பிப்ரவரியில் ஒருவருக்கும் கரோனா பதிவாகியுள்ளன. மார்ச், ஏப்ரல் மாதங்களில் தலா 3 பேருக்குத் தொற்று பதிவாகியது. இதையடுத்து மே மாதத்தில் 33 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளன.

புதிய பாதிப்புகளில், பெங்களூரு கிராமப்புற மாவட்டமான ஹோல்கோட்டைச் சேர்ந்த 9 மாதக் குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்து நிலையில், தொடர் சிகிச்சையளிப்பதற்காக பெங்களூருவில் உள்ள வாணி விலாஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

தற்போது கர்நாடகத்தில் 16 பேர் செயலில் உள்ளதாகவும், அதேசமயம் இந்தியாவில் 257 பேருக்கு கரோனா தொற்று உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன.

பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், விழிப்புடன் இருக்குமாறும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில், காய்ச்சல் போன்ற நோய், கடுமையான சுவாச தொற்று ஆகியவை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.