மனைவியைக் கழுத்து வெட்டி படுகொலை செய்தமை ஏன்? – பொலிஸாரிடம் கணவன் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள்.

வவுனியாவில் ஆசிரியையான 32 இளம் குடும்பப் பெண் கணவனால் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

தனது மனைவியைக் கழுத்து வெட்டிக் கொலை செய்த கணவன், மனைவியின் தலையுடன் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கொடூர சம்பவம் நேற்று இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 35 வயதான யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சுகிர்தரன் என்ற இளம் குடும்பஸ்தரான மரணமடைந்த பெண்ணின் கணவன் வழங்கிய வாக்குமூலத்தில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவர்ணலதா என்ற 32 வயதான நைனாமடு அரச பாடசாலையில் ஆரம்பப் பிரிவு ஆசிரியரான இவர் கணவனால் கொலை செய்யப்பட்டமைக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த போதிலும் கணவனால் புளியங்குளம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தனது மனைவி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருந்தார் எனவும், அதில் ஏற்பட்ட சந்தேகமே இந்த நிலைமைக்குக் காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் கொழும்பில் தங்கியிருந்து கட்டட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார் என்று தெரிவித்துள்ள மேற்படி இளம் குடும்பஸ்தர், நீண்ட காலமாக தனக்கும் மனைவிக்கும் இடையில் பல சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை தனது தொலைபேசிக்கு ஒரு 21 வயது இளைஞரால் அனுப்பப்பட்ட புகைப்படங்களால் தனது கோபம் உச்சம் அடைந்த நிலையில் தான் கொழும்பிலிருந்து நொச்சிக்குளம் கிராமத்துக்கு வருகை தந்து தன் மனைவியுடன் பல்வேறு விடயங்களில் கருத்து முரண்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், இதில் தீர்வு கிடைக்காத நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம், மானிப்பாய்க்குச் சென்று பின்னர் திங்கட்கிழமை மீண்டும் வருகை தந்து மனைவியைத் தாய் சேய் பராமரிப்பு நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிவித்த அவர், இந்தக் குழந்தைக்குக் காரணம் யார் என்பது தொடர்பில் தனக்கு நீண்ட கால சந்தேகம் ஏற்பட்டு இருந்ததாகவும், இது தொடர்பாக தன் மனைவியிடம் கேட்டதன் பிரகாரம் எவ்விதமான பதிலும் அவர் கூறவில்லை என்றும் கூறியுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை அவர் அதை ஒத்துக்கொண்டதையடுத்து தனது மனைவியைப் புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியே அவர் சின்ன பூவரசங்குளம் காட்டுப் பாதையால் அழைத்து வந்திருக்கின்றார் என்றும் தெரிவித்திருந்தார்.

அந்தக் காட்டுப் பாதையின் வழியே 200 மீற்றர் அளவில் சென்றதன் பின்னர் மனைவி ஏன் இந்த வீதியால் செல்கிறீர்கள் எனக் கேட்டபோது, தான் அந்த 21 வயது இளைஞர் இந்தப் பகுதிக்கு வருவதாகவும், இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு காண்பதற்காக இங்கே வந்துள்ளோம் என்றும் கூறியதாகப் பொலிஸாரிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியின் மூலம் தனது மனைவியை வெட்டியதாகவும், அவர் சிறிது தூரம் ஓடி கீழே விழுந்ததன் பின்னர் தான் மனைவியை மூன்று முறை வெட்டி கழுத்தைத் துண்டாக்கி அதனை அவர் அணிந்திருந்த மழைக் கவசத்தால் மூடி மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் வைத்து கொண்டு வந்ததாகவும் புளியங்குளம் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிளையும், தலையையும் கைப்பற்றியதோடு அவரையும் கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து உயிரிழந்து இறந்த பெண்ணின் கணவன் சுகிர்தரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சின்னப்பூவரசங்குளம் காட்டுப் பகுதிக்குச் சென்ற பொலிஸார் சடலத்தைக் கைப்பற்றி இருந்தனர்.

அந்தப் பகுதிக்குத் தடயவியல் பொலிஸாரும் வருகை தந்து அங்கிருந்த சான்றுப் பொருட்களைச் சேகரித்ததோடு, குறித்த விடயம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.