விவசாயிகளை ஏழ்மைக்குள் தள்ளாமல் அவர்களுக்கு உரிய நீதியை வழங்குங்கள் – சபையில் அரசிடம் சஜித் பிரேமதாஸ கோரிக்கை.

அரசுக்கு வாக்களித்த விவசாயிகளுக்கு இப்போதாவது முறையான நீதியை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

விவசாயிகளின் பிரச்சினைகள் ஏற்கனவே உக்கிரமடைந்துள்ள நிலையில், உற்பத்திச் செலவுக்கு ஏற்ப இலாபத்துடன் நெல்லை விற்பனை செய்ய முடியாத பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் நேற்றுப் புதன்கிழமை ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

“ஈர நெல் 80 முதல் 85 ரூபா வரையிலும், காய்ந்த நெல் 90 முதல் 100 ரூபா வரையிலும் கொள்வனவு செய்யப்படுகின்றது. ஆனால், அரசின் புள்ளிவிபரங்களின்படி ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாகின்றது. இதனால் விவசாயிகள் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.

தேர்தல் காலத்தில் அரசு விவசாயிகளுக்காகக் கூறிய விடயங்கள் எதுவும் இன்று நடைமுறைப்படுத்தப்படவில்லை. விவசாயிகளை ஏழ்மைக்குள் தள்ளி, அவர்களின் ஜீவனோபாயத்தை நசுக்காமல் முறையான விலையை உறுதிப்படுத்த வேண்டும்.

ஒரு ஹெக்டேயருக்குத் தேவையான 225 கிலோகிராம் யூரியா உரத்துக்கு அரசு வழங்கும் 30 ஆயிரம் ரூபா மானியம் போதுமானதாக இல்லை.

விதை நெல், உரம், எரிபொருள் மற்றும் கிருமிநாசினிகளின் விலைகள் பலமடங்கு உயர்ந்துள்ளதோடு, யானை – மனித மோதல் போன்ற பாரிய சவால்களுக்கும் விவசாயிகள் முகங்கொடுத்து வருகின்றனர்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பைக் கணக்கிடுவதில் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் கணிப்பீடுகளில் பிழைகள் காணப்படுவதால், அவற்றை உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும்.

வேளாண்மை மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் கிராமிய சமூகம் பாரிய அவல நிலைக்குத் தள்ளப்படும்.

அரசுக்குத் தியாகங்களைச் செய்து வாக்களித்த விவசாயிகளின் நலனைக் காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.