அமெரிக்க சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர், ஆணையாளர் ஆகியோர் இலங்கை விஜயம்!

அமெரிக்க வணிகங்களையும் நுகர்வோரையும் இந்தோ – பசிபிக் பிராந்தியத்திலுள்ள சந்தைகளுடன் இணைக்கும் கப்பல் போக்குவரத்து வலையமைப்புகள், கடல்சார் வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற விடயங்களில் அமெரிக்க – இலங்கை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, அமெரிக்க சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் லோரா டிபெல்லா மற்றும் அதன் ஆணையாளரான ரொபர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் நாளைமறுதினம் 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

தமது விஜயத்தின் போது, இலங்கை அரச மற்றும் கடல்சார் துறையிலுள்ள சிரேஷ்ட தலைவர்களுடன் தலைவர் டிபெல்லா மற்றும் ஆணையாளர் ஹார்வி ஆகியோர் சந்திப்புகளை மேற்கொள்வர்.

எட்டாவது கொழும்பு சர்வதேச கடல்சார் மற்றும் ஏற்பாட்டியல் மாநாட்டில் டிபெல்லா உரையாற்றுவதுடன், அதன் குழுவொன்றில் ஆணையாளர் ஹார்வி பணியாற்றுவார்.

“உலகெங்கிலுமுள்ள பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கும் கொள்கலன்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவை கொழும்பினூடாகப் பயணிப்பதானது, இந்து சமுத்திரத்தினூடாக இடம்பெறும் கப்பல் போக்குவரத்தின் மையத்தில் இலங்கை கொண்டிருக்கும் வகிபாகத்துக்கான ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாக விளங்குகின்றது” என்று அமெரிக்கத் தூதுவர் எரிக் எஸ். மயர் தெரிவித்தார்.

“தலைவர் டிபெல்லாவின் விஜயமானது, அந்தப் பங்கின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதுடன், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் இந்த முக்கிய வர்த்தகத்தைத் தடையின்றி நடைபெறச் செய்யும் மக்கள் மற்றும் நிறுவனங்களுடனான எமது ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பையும் வழங்குகின்றது. பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான கப்பல் போக்குவரத்தானது, அமெரிக்க வணிகங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குகின்றது, பிராந்தியத்தின் ஒரு கேந்திர மையமாக இலங்கையின் நிலையைப் பலப்படுத்துகின்றது மற்றும் எமது இரு பொருளாதாரங்களின் செழிப்புக்கும் உதவி செய்கின்றது” என்றும் அவர் மேலும் கூறினார்.

1961ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவானது, அமெரிக்க ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலனுக்காக அமெரிக்க சர்வதேச கடல்வழிப் போக்குவரத்துக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்துவதற்குப் பொறுப்பான சமஷ்டி அரசின் ஒரு சுயாதீன முகவரமைப்பாகும்.

போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் நம்பகமான ஒரு சர்வதேச கடல்வழிப் போக்குவரத்துக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், கப்பற் போக்குவரத்துத் துறையிலுள்ள நியாயமற்ற அல்லது ஏமாற்றும் நடைமுறைகளிலிருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதற்கும் அமெரிக்க சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழு பணியாற்றுகின்றது.

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்ப்பால் பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவுக்கு டிபெல்லா தலைமை தாங்கி வழிநடத்துகின்றார்.

2026 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் திகதி ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்ப்பால் பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவின் ஆணையாளராக ரொபர்ட் ஹார்வி பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.