பொறுப்புக்கூறலை மேலும் பலப்படுத்துக!

மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும் நல்லிணக்கம் மற்றும் ஆற்றுப்படுத்தலை மேம்படுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் செயற்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசிடம் புதிதாக வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கை கோரியுள்ளது.

ஒக்டோபர் 2025 முதல் ஜூலை 2026 வரையிலான காலப் பகுதியை உள்ளடக்கிய இந்த அறிக்கை ஊழலை எதிர்கொள்ளல், அரசியல் படுகொலைகள் தொடர்பாக உயர்மட்ட கைதுகள் மற்றும் புலன்விசாரணைகள், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல்கள் மற்றும் 2019 உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் என்பனவை தொடர்பான நடவடிக்கைகளை கவனத்தில் எடுக்கின்றது. இதே காலப்பகுதியில் இலங்கை டித்வா சூறாவளி மற்றும் உலகளாவிய எரிசக்தி விலையேற்றம் ஆகியவற்றால் ஏற்பட்ட சவால்களையும் எதிர்கொண்டது.

நீண்ட கால சட்ட மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் தொடர்பான உறுதிமொழி அளித்திருந்தாலும் இலங்கை அரசு தொடர்ந்தும் அடக்குமுறைக்கு வழிவகுக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றது என்றும், அது எதேச்சதிகார கைதுகளுக்கும் குற்றச்சாட்டின்றிய தடுத்துவைப்புக்களுக்கும் கொண்டு செல்லும் என்றும் அறிக்கை கூறுகின்றது.

சிவில் சமூகப் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் அரச கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுவதுடன், நிலம் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பதற்றங்கள் தொடர்ந்தும் நீடிக்கின்றன.

“பல தசாப்தங்களாக நீடித்துவரும் நிறைவேற்று அதிகார துஷ்பிரயோகம், அடக்குமுறைச் சட்டங்கள், தடுப்புக்காவல் வன்முறை மற்றும் தண்டனை விலக்குரிமை ஆகியவற்றை மாற்றுவதற்கான வாய்ப்பு இன்னும் இலங்கை அரசுக்கு உள்ளது” என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் துர்க் கூறினார்.

“ஊழல் வழக்குகள் மற்றும் போருக்குப் பிந்தைய காலத்துடன் தொடர்புடைய சில குற்றங்கள் குறித்து இலங்கையில் அதிகாரத்தில் உள்ளவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பது ஊக்கமளிப்பதாக இருந்தாலும், நாட்டில் நீண்டகாலமாக நிலவி வரும் தண்டனை விலக்குரிமை நிலைமையை முடிவுக்கு கொண்டுவர இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று தடுப்புக்காவலில் நடைபெறும் தொடர்ச்சியான சித்திரவதை மற்றும் மரணங்கள் தொடர்பாக இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுகின்றது.

2025 ஆம் ஆண்டு 602 சித்திரவதை மற்றும் கொடுமைப்படுத்துதல் வழக்குகளும் ஏப்ரல் 2026 வரையிலான காலப்பகுதியில் 138 வழக்குகளும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், கடந்த ஆண்டு 18 தடுப்புக்காவல் மரணங்களும் இந்த ஆண்டு ஏப்ரல் காலப்பகுதி வரை மூன்று அத்தகைய மரணங்களும் இடம்பெற்றன எனத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையிட்டுள்ளது.

குறிப்பாக தடுப்புக்காவல் மரணமொன்றில் போதைப்பொருள் தொடர்பான சிறிய குற்றத்துக்குத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதான கைதி ஒருவர் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடந்த மே 3 ஆம் திகதி உயிரிழந்தார் என்று கூறப்படுகின்றது. மேற்படி நபர் கொடூரமான தாக்குதலுக்கு ஆளானதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.

மேலும், குறைந்தது 32 பேர் உயிரிழக்கக் காரணமான கடந்த ஜூலை மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைக் கலவரத்தைக் குறிப்பிட்டு கடுமையான இட நெருக்கடி உள்ளிட்ட கட்டமைப்பு ரீதியிலான சிக்கல்களைத் தீர்ப்பதற்கான சிறைச்சாலைச் சீர்திருத்தங்களின் அவசரத் தேவையை அறிக்கை வலியுறுத்துகின்றது.

மேலும், ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் சிவில் சமூக பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் மீதான கண்காணிப்பு தொடர்பாக 16 புகார்களைப் பெற்றுள்ளது. “குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அல்லது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட இராணுவ மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் அரசு சார் கண்காணிப்பு, அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கல் நடவடிக்கைகளின் தெளிவான மற்றும் தொடர்ச்சியான போக்கை இந்தத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன” என்று அந்த அறிக்கை கூறுகின்றது.

“தனிநபர்களிடம் அவர்களின் பயணங்கள், குறிப்பாக ஜெனிவாவுக்கான பயணங்கள் மற்றும் ஐ.நாவின் மனித உரிமைகள் சார்ந்த செயல்முறைகளில் அவர்கள் ஈடுபடுகின்றமை குறித்தும், அத்துடன் அவர்களின் அமைப்புசார் தொடர்புகள், நிதி ஆதாரங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் அல்லது நினைவு நிகழ்வுகளில் அவர்கள் பங்கேற்பது குறித்தும் மீண்டும் மீண்டும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன” என்று அது குறிப்பிடுகின்றது.

அரசு இனவாதத்தைத் தொடர்ந்தும் கண்டித்து தேசிய ஒற்றுமையை ஊக்குவித்து வந்தாலும், உண்மை மற்றம் நீதியை நிலைநாட்டுவதற்கான பரந்த முயற்சிகள் முடங்கிப்போகும் அபாயம் உள்ளது என்றும், இதனால் ஆக்கபூர்வமான மாற்றத்துக்கான வேகம் இழக்கப்படுகின்றது என்றும் அறிக்கை எச்சரிக்கின்றது.

ஆயுத மோதலின் போது இழைக்கப்பட்டன எனக் கூறப்படும் சர்வதேச சட்டத்தின் கீழான குற்றங்கள் குறித்து திறம்பட விசாரணை நடத்தி வழக்குத் தொடுப்பதில் தோல்விகரமான நிலை தொடர்ந்தும் நீடிக்கின்றது. “இரு தசாப்த காலத்துக்கும் மேலான ஆயத மோதலின் போது அனைத்து தரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதை நோக்கிய தீர்க்கமான மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கையே மிக முக்கியமானதாகும்” என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் துர்க் கூறினார்.

கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் இரவீந்திரநாத் 2006 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பிள்ளையான் என்று அழைக்கப்படுகின்ற கிழக்கு மாகாணத்தின முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் மூவர் மீது குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் அண்மையில் எடுத்த முடிவை ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் கவனத்தில் கொண்டார். “இருப்பினும், 20 ஆண்டுகளுக்கு முன்பு மூதூரில் ‘பசிக்கு எதிரான நடவடிக்கை’ அமைப்பைச் சேர்ந்த 17 மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் உட்பட முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வழக்குகள் பல ஆண்டுகளாகத் தேக்கமடைந்திருப்பது வருந்தத்தக்கது” என்று கூறிய அவர், இத்தகைய தாமதங்களுக்குத் தீர்வு காண அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

இலங்கை தனது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறும் குறிப்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில், அந்தச் சட்டத்தை பயன்படுத்துவதற்குத் தற்காலிகத் தடை விதித்தல் மற்றும் அதன் கீழ் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையாளர் வலியுறுத்தினார்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நபர்கள், அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையான முறையில் கையாளப்பட்டுத் தீர்க்கப்படும் வரை, அரசு, பாதுகாப்புத்துறை அல்லது இராஜதந்திரப் பணிகளில் உள்ள உயர் பதவிகளிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகூரல் முயற்சிகளுக்கும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விடுவிப்பதற்கும் அரசு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.