டிராபிக் ராமசாமி காலமானார்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இன்று (04) சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

இவர் இன்று தனது 87 வயதில் காலமாகியுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் சிம்ம சொப்பனமாய் திகழ்பவர் டிராஃபிக் ராமசாமி என்றால் மிகையாகாது.

ஆரம்பக் காலத்தில் ராமசாமி தானே முன்வந்து சென்னை, பாரிமுனையின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் பொலிஸாருக்கு உதவி செய்தார்.

இதனைத் தொடர்ந்து போக்குவரத்து பொலிஸார் இவருக்கு ஓர் அடையாள அட்டை வழங்கியது. அன்று தொடக்கம் இவர் ட்ராபிக் ராமசாமி என அழைக்கப்பட்டார்.

அதேபோல், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களைப் பொது வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர். தீர்வும் கண்டவர். மேலும், சென்னையில் வரம்பு மீறிக் கட்டப்படும் கட்டிடங்கள், வாகன பார்க்கிங் வசதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு எதிராக இவர் தொடர்ந்த பொதுநல வழக்கு காரணமாக உயர் நீதிமன்றம் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த சில வாரங்களாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.