‘கார்த்திகை 27’ மாவீரர் நாளை விட்டுக்கொடுக்க முடியாது! – கஜேந்திரகுமாருக்கு அரியம் பதிலடி.

“கார்த்திகை 27ஆம் திகதியை தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் நாளாக மாத்திரம் அனுஷ்டிக்காமல் விடுதலைப் போராட்டத்துக்காக உயிர்நீத்த அனைவரையும் நினைவேந்தி அனுஷ்டிப்போம் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவித்துள்ள கருத்தை ஒருபோதும் ஏற்க முடியாது.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“மாவீரர் நாள் என்பது விடுதலைப்புலிகளின் போராளிகள் போராடி உயிர்நீத்தமைக்காக வடக்கு,கிழக்கில் உள்ள 33 மாவீரர் துயிலும் இல்லங்களில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் ஒரு தனித்துவமான நினைவு வணக்கம்.

கார்திகை 27ஆம் திகதியைப் பிரகடனப்படுத்தி கடந்த 1989, கார்திகை 27 ஆம் திகதி தொடக்கம் மாவீரர் நாள் நினைவு கூரப்படுகின்றது.

பொதுமக்கள் பெருமளவாக முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த தினம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி என்பதால் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு வணக்க நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.

கஜேந்திரகுமாரின் கருத்துப்படி பொதுமக்கள், மாவீரர்கள், ஏனைய இயக்கப் போராளிகள் எல்லோரையும் நினைவேந்தி பொதுவாக கார்திகை 27 இல் அனுஷ்டிப்பதாயின் முள்ளிவாய்க்கால் மே 18 நினைவு தினம் செய்யத்தேவை இல்லை அல்லவா?

ஒரு விடுதலை இயக்கம் தொடர்ந்து பேணப்பட்டுவந்த நடைமுறையை அந்த விடுதலை இயக்கம் தற்போது மௌனித்து விட்டது என்பதற்காக அந்த நினைவு நாளை இப்போது உள்ள தனிநபராலோ அல்லது பொது அமைப்புக்களாலோ அல்லது அரசியல் கட்சிகளாலோ அதனை மாற்றுவது அல்லது வேறு ஒன்றை அதனுடன் கலப்பது மாவீரர் தினத்தின் புனிதத்தன்மையைக் கலங்கப்படுத்துவதாகவே அமையும்.

எனவே, தனித்துவமான மாவீரர் நாளை தனித்துவமாக நினைவு கூருவதே சிறப்பு.

இலங்கை அரசுக்காகவோ, இராணுவக் கெடுபிடிகளுக்காகவோ இந்தத் தினங்களை உத்தியோகபூர்வமாக மாற்றுவதற்கு எந்த அரசியல் கட்சிகளுக்கும் உரிமை இல்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.