மா_வீரர்களின் தியாகம் மதிக்கப்பட வேண்டுமானால் தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து பயணியுங்கள்!

“எமது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களின் தியாகத்தை உண்மையிலே மதிப்பதாக இருந்தால் தமிழ்ப் பிரதிநிதிகள் அனைவரும் தமிழீழத் தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க வேண்டும்.”

இவ்வாறு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாந்தன் தெரிவித்தார்.

ஜனநாயக போராளிகள் கட்சியினர் போராளிகளின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வை நேற்று (24) வெல்லாவெளியில் நடத்தினர்.

மட்டு. அம்பாறை தலைமையகத்தில் கட்சியின் உப தலைவர் என். நகுலேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே சாந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

இந்நிகழ்வில் ஆரம்பத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள், ஏனையோர் சேர்ந்து ஈகச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அக வணக்கத்தை மேற்கொண்டார்கள்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்மைப்பின் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தம்பிப்பிள்ளை தியாகராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அங்கு சாந்தன் மேலும் உரையாற்றுகையில்,

“நாம் எமது மண்ணில் யாருடைய அச்சுறுத்தல் இல்லாமல் சுதந்திரமாக எங்களை நாம் ஆளக்கூடிய ஒரு அதிகாரத்தைக் கோரி போராட்டத்தை நடத்தி வந்தோம். இந்த மக்கள் விடுதலைக்காக – இந்த மண்ணின் விடுதலைக்காக எமது மாவீரர்கள் பல வடிவங்களில் தியாகங்களைச் செய்தார்கள்.

எனவே, அந்த மாவீரர்களின் தியாகங்கள் வெற்றிபெற வேண்டுமாக இருந்தால் சுயாட்சியுடன் கூடிய ஒரு தீர்வை நாங்கள் எட்ட வேண்டும்.

நாங்கள் ஆயுதப் போராட்டம், அரசியல் போராட்டம் என்று இரண்டு கோணங்களிலே அன்று போராட்டங்களை நகர்த்தி இருந்தோம். 2009 இல் எமது ஆயுதப் போராட்டம் மௌனித்தது. இருந்தபோதிலும் எமது அரசியல் போராட்டம் என்பது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இந்த மாவீரர் தின நிகழ்வில் அரசியல்வாதிகளுக்கு ஒன்றைக் கூறி வைக்க விரும்புகின்றேன். தமிழ் மக்களின் அபிலாஷைகளோடு – மாவீரர்களின் அபிலாஷைகளோடு விளையாட வேண்டாம்.

தமிழ்த் தேசிய பரப்பில் இருக்கக்கூடிய தமிழ்ப் பிரதிநிதிகள் அனைவரும் ஒரு குடையின்கீழ் ஒற்றுமையாகப் பயணிக்க வேண்டும். நான் பெரிதா? நீ பெரிதா? என்று தூக்கிப் பிடித்துக் கொண்டு அலைய வேண்டாம். நீங்கள் கெட்டிக்காரர்களாக – பலவான்களாக இருக்கலாம். ஆனால், எமது நோக்கங்கள் எல்லாம் ஒன்று என்பதை மறந்து விடக்கூடாது.

நான் தமிழ்ப் பிரதிநிதிகள் என்று சொல்வது சிங்களக் கட்சிகளில் இருக்கின்ற தமிழ்ப் பிரதிநிதிகளைக் குறிப்பிடவில்லை. தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள தமிழ்க் கட்சிகளைக் குறிப்பிடுகின்றேன்.

தமிழ்த் தேசிய பரப்பில் இருக்கின்ற தமிழ்ப் பிரதிநிதிகள் தங்களது சுயலாபம், சுய கொள்கைகளைப் புறந்தள்ளிவிட்டு ஒரு குடையின் கீழ் மாவீரரின் தியாகத்துக்காக ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

இன்று ஜனாதிபதி ரணில் தமிழர்களைப் பேச்சு மேடைக்கு அழைத்திருக்கின்றார். இந்த இடத்திலே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஒன்றாக இணைந்து அந்தப் பேச்சை மேற்கொண்டு நாம் எதிர்பார்த்த அந்தத் தீர்வை அடைய வேண்டும்.

அடுத்து மக்களுக்கான ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன். மக்களே தேர்தல் ஒன்று வரப் போகின்றது. பலரும் வருவார்கள். அற்பசொற்ப சலுகைகளுக்குச் சோரம் போகாதீர்கள். வாக்குக் கேட்டு வரும் எல்லோருக்கும் வாக்களிக்க வேண்டாம். தமிழ்த் தேசிய உணர்வோடு தமிழ்த் தேசியத்துக்கு மாத்திரம் வாக்களியுங்கள். உங்களது பிள்ளைகளின் தியாகத்தை நெஞ்சில் நிறுத்தி உங்கள் பிள்ளைகள் எதற்காக இந்த மண்ணிலே ஆகுதியானார்களோ அதை நினைத்து வாக்களியுங்கள் .

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளர்களை ஆதரித்து எமது அபிலாஷைகளை வென்றெடுக்க வேண்டும்” – என்றார்.

இந்த நிகழ்வின் இறுதியில் மாவீரர்களின் பெற்றோர் உலர் உணவு, மதிய உணவு மற்றும் தென்னம்பிள்ளை வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.