அரசியலுக்கு வரும் நிலைப்பாட்டில் கோட்டா இல்லை! – பிரசன்ன தெரிவிப்பு.

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இப்போது கடும் கவலையில் உள்ளார். அவர் அரசியலுக்கு வரும் நிலைப்பாட்டில் இல்லை.”

இவ்வாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

‘கோட்டாபய மீண்டும் அரசியலுக்கு வருவாரா?’ என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவரின் பதிலின் முழு விபரம் வருமாறு:-

“கோட்டாபய இப்போது கடும் கவலையில் உள்ளார். அவர் நல்லவர். அவர் ஜனாதிபதியாகி குறுகிய காலத்துக்குள் நாட்டுக்கு நல்லது செய்ய முற்பட்டார்.

நஞ்சற்ற உணவுகளை வழங்குவதற்கு அவர் முயற்சித்த போது மக்கள் அதை விரும்பவில்லை. உள்ளூர் உற்பத்தியைக் கட்டியெழுப்புவதற்கும் அவர் முயற்சி செய்தார். அதுவும் முடியவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு 69 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. அந்த 69 இலட்சம் பேரும் அவரை எதிர்க்கவில்லை.

கிராம மட்டத்தில் இன்னும் மக்கள் அவரை நேசிக்கின்றார்கள். அங்கு சென்றால் தெரியும். கோட்டாபய பாவம் என்று அவர்கள் சொல்கின்றார்கள்.

கோட்டாபய ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு முதலில் விரும்பவில்லை. என்னால் செய்ய முடியாது. மஹிந்த அண்ணாவிடம் கூறுங்கள் என்று என்னிடம் கூறினார்.

நாட்டு மக்கள் உங்களையே விரும்புகிறார்கள் என்று கூறி அவரை இணங்க வைத்தோம். அது சரியாகவே அமைந்தது. 69 இலட்சம் மக்கள் அவரை ஆதரித்தனர்.

அவர் அரசியலுக்கு வரும் நிலைப்பாட்டில் இல்லை. நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் அரசியலுக்கு வராமல் செய்ய வேண்டும் என்பதுதான் அவரது தற்போதைய நிலைப்பாடு. அது பின்னர் மாறுபடுமா என்று சொல்ல முடியாது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.