லத்தி : சினிமா விமர்சனம்.

போலீஸ் கான்ஸ்டபிள் விஷால். இவருடைய மனைவி சுனைனா நர்ஸ் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு பள்ளியில் படிக்கும் ஒரே மகன். இளம் பெண் பாலியல் பலாத்கார கொலை வழக்கில் ஒருவனை கைது செய்து லாக்கப்பில் வைத்து கண்மூடித்தனமாக தாக்குகிறார் விஷால். அடிவாங்கியவன் குற்றவாளி இல்லை என்பது ஊர்ஜிதமாகிறது. இதனால் விஷால் பணியில் இருந்து சஸ்பெண்ட் ஆகிறார்.

பின்னர் உயர் போலீஸ் அதிகாரியின் சிபாரிசு மூலம் மீண்டும் வேலையில் சேருகிறார். விஷாலுக்கு உதவிய போலீஸ் அதிகாரியின் மகளை ஒரு ரவுடி அவமானப்படுத்துகிறான். அந்த நிகழ்வால் மன உளைச்சலுக்கு ஆளாகும் உயர் அதிகாரி ரவுடியை பிடித்து வைத்து லத்தி சார்ஜ் செய்ய விஷாலை அழைக்கிறார். விஷாலும் ரவுடியை வெளுத்து வாங்குகிறார். அடிவாங்கிய ரவுடி பெரிய தாதாவின் மகன் என்று தெரிய வருகிறது. விஷாலை போட்டுத் தள்ள ரவுடி கும்பல் வளைக்கிறது. தன்னையும், தன் குடும்பத்தையும் விஷால் எப்படி பாதுகாத்து கொள்கிறார், அப்பாவி மக்களுக்கு கொடுமை செய்யும் ரவுடி கும்பலை எப்படி வேட்டையாடுகிறார் என்பது மீதி கதை.

சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் கச்சிதமாக வருகிறார் விஷால். குடும்ப தலைவராக அடங்கி போகிறார். பாசமான தந்தையாக மனதில் நிற்கிறார். அதிரடி ஏரியாவில் நின்று நிதானமாக சுழன்று அடிக்கிறார். கிளைமாக்சில் மகன் நிலையை எண்ணி பரிதவிக்கும் காட்சிகளில் நடிப்பில் உச்சம் தொடுகிறார். குடும்ப தலைவி வேடத்தை அனாயசமாக ஊதி தள்ளுகிறார் சுனைனா. கணவனிடம் முத்தம் கொடுத்து சம்மதம் கேட்கும் இடங்கள் கவிதை. பார்த்தாலே பயம் ஒட்டிக்கொள்ளும் குரூர வில்லனாக மிரட்டி உள்ளார் சன்னி.

வெள்ளையாக வரும் ரமணா வில்லத்தனத்தில் ‘ஸ்கோர்’ செய்கிறார். இனி அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவியலாம். பிரபு, ராஜ்கபூர், ஏ.வெங்கடேஷ், தலைவாசல் விஜய், வினோத் சாகர், முனீஸ்காந்த், மாஸ்டர் லிரிஷ் ராகவ், வினோதினி என படத்தில் வரும் எல்லா நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களை சரியாக செய்திருக்கிறார்கள். கிளைமாக்ஸ் சண்டை நீளத்தை குறைத்து இருக்கலாம். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் கவனம் பெறுகிறது. பின்னணி இசையும் பலம்.

பாலசுப்ரமணியம் மற்றும் பாலகிருஷ்ணாவின் ஒளிப்பதிவு ஒவ்வொரு பிரேமையும் உயர்த்தி காட்டியுள்ளது. கார் கீழே படுத்திருக்கும் வில்லன் தன்னை அடித்தது விஷால்தான் என்று அடையாளம் காணும் காட்சி சிறப்பு. லாஜிக் பார்க்காமல் ஒரு ஆக்ஷன் படத்தை ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் வினோத்குமார். சண்டை பிரியர்களுக்கு செம விருந்து.

Leave A Reply

Your email address will not be published.