5 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுங்க… டெல்லி கார் சம்பவம் குறித்து கெஜ்ரிவால் சீற்றம்!

டெல்லியில் இளம் பெண் ஒருவர் கார் மோதி சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நிர்வாண கோலத்தில் இழுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

புத்தாண்டு இரவில் 20 வயதான அந்த இளம்பெண் தனது ஸ்கூட்டியில் வேலை நிமித்தமாக வெளியே சென்றுள்ளார். நள்ளிரவு நேரத்தில் அவர் வீடு திரும்பிய போது சாலையில் சென்ற ஒரு கார் பெண்ணின் ஸ்கூட்டியில் மோதியுள்ளது. அந்த காரில் வந்த 5 பேரும், காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். அப்போது விபத்தில் சிக்கிய அந்த பெண்ணின் ஆடை அவர்களது காரில் சிக்கியுள்ளது.

கார் நிற்காமல் சென்றதால், அந்த பெண்ணின் ஆடை கிழிந்தால், அவர் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் பெண்ணின் உடலை காவல்துறை மீட்டது. மேலும், காரில் சென்ற ஐந்து பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இது தற்செயலாக நேர்ந்த விபத்து அல்ல எனவும், பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உயிரிழந்த பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளும் கடும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேரை தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சீற்றத்துடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கெஜ்ரிவால், “அந்த பெண்ணுக்கு நேர்ந்தது மிகவும் வெட்கத்திற்குரிய நிகழ்வு. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அவர்களை தூக்கிலிட வேண்டும். இது மிகவும் அரிதான குற்ற நிகழ்வு. சமூகம் எந்த திசையில் செல்கிறது என்றே தெரியவில்லை” என்று சீற்றத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை டெல்லி காவல்துறை காப்பாற்ற நினைப்பதாகவும், பாஜக இதன் பின்னணியில் உள்ளதாகவும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதேவேளை, டெல்லி துணை நிலை ஆளுநர் வி கே சக்சேனா, குற்றவாளிகளுக்கு நிச்சயம் கடுமையான தண்டனை அளிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.