தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த ஒரு வயது குழந்தை மூச்சுத் திணறி உயிரிழப்பு!

சென்னை விருகம்பாக்கம் ராஜேஸ்வரி காலணியைச் சேர்ந்தவர் அருண்குமார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இவர், வியாபாரிகள் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார். இவருக்கு 6 வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். மேலும் 1 வயதில் இளமாறன் என்ற குழந்தையும் இருந்தது. கடந்த 14ஆம் தேதி விடுமுறை நாள் என்பதால் அனைவரும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தனர். மனைவி தேவகி சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது, குழந்தை வீட்டின் கழிவறையில் இருந்த தண்ணீர் நிரம்பிய வாளியில் விளையாடியுள்ளான். இதனை யாரும் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சிறிது நேரத்திற்குப் பிறகு குழந்தையின் சத்தம் கேட்காததால் அவரது அம்மா தேவகி, இளமாறனை தேடியபோது தண்ணீர் வாளிக்குள் நீரில் மூழ்கியபடி மயங்கிய நிலையில் கிடந்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக குழந்தையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை தண்ணீரில் மூழ்கியதால் மூச்சு திணறி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தை இறந்ததைக் கேட்டதும் உடலைப் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்த தகவலறிந்த விருகம்பாக்கம் காவல் துறையினர் குழந்தை இளமாறனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குழந்தை இறப்பு தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த இளமாறனுக்கு அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் முதலாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். பிறந்தநாள் கொண்டாடிய 2 நாளிலேயே குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.