கிளர்ச்சி எதிரொலி – பிரேசில் ராணுவத் தலைவர் பதவி நீக்கம்.

பிரேசிலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிட்ட அதிபர் ஜெயீர் போல்சனாரோ தோல்வி அடைந்தார்.

ஆனால் அவர் தனது தோல்வியை ஏற்காமல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்தாக குற்றம் சாட்டி வந்தார். இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபர் இனாசியோ லுடா சில்வா கடந்த 1-ம் தேதி பதவியேற்றார்.

இதற்கிடையில் லுடா அதிகாரத்தைக் கைப்பற்றுவதை தடுக்க ராணுவ தலையீட்டுக்கு அழைப்பு விடுத்து போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 8-ம் தேதி தலைநகர் பிரேசிலியாவில் திரண்ட போல்சனாரோவின் ஆதரவாளர்கள் பாராளுமன்றம், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் அதிபர் மாளிகை ஆகிய கட்டிடங்களுக்குள் புகுந்து சூறையாடினர்.

இதனால் அந்த பகுதியே போர்க்களமாக மாறியது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலவரக்காரர்களை அப்புறப்படுத்தினர். கலவரத்தில் ஈடுபட்டதாக 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

போல்சனாரோ இந்த கலவரத்தை தூண்டியதாக அதிபர் லுலா டா சில்வா குற்றம் சாட்டிய நிலையில், போல்சனாரோ அதனை திட்டவட்டமாக மறுத்தார். இந்நிலையில், தலைநகரில் ஜனவரி 8-ம் தேதி கிளர்ச்சியைத் தொடர்ந்து நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா நேற்று பிரேசிலின் ராணுவத் தளபதியை பதவி நீக்கம் செய்தார்.

இதன்படி, ஜெனரல் ஜூலியோ சீசர் டி அர்ருடா ராணுவத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக பிரேசிலிய ஆயுதப் படைகளின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக தென்கிழக்கு ராணுவக் கட்டளைத் தலைவராக இருந்த ஜெனரல் டோமஸ் மிகுவல் ரிபேரோ பைவா நியமிக்கப்பட்டார்.

ஏற்கனவே அதிபர் இல்ல கலவரம் தொடர்பாக 40 வீரர்களை பணிநீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் லூலா உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.