குட்டித் தேர்தலை ஒத்திவைத்தால் இரு வழிகளில் போராட எதிரணிகள் தீர்மானம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றம் செல்வதற்கு முடிவெடுத்துள்ளது. அதேவேளை, ஜே.வி.பி. மக்களை வீதிக்கு இறக்கிப் போராட்டம் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சிகளின் மூத்த உறுப்பினர்கள் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:-

“வேட்புமனுக்கள் தாக்கல் நிறைவு செய்யப்பட்டுள்ள போதிலும், தேர்தலை அரசு எந்நேரமும் ஒத்திப்போடலாம் என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கின்றது. அதற்குக் கரணம் அரசு இன்னும் தேர்தலுக்கு எதிராகப் பேசி வருகின்றமைதான்.

ஒரு பக்கம் தேர்தலுக்குத் தயார் என்று கூறிக்கொண்டே – அதற்கான ஏற்பாடுகளையும் செய்துண்டே தேர்தலுக்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றது அரசு.

அரசு அதற்காகக் கூறி வருகின்ற காரணம் தேர்தல் நடத்துவதற்குப் பணமில்லை. பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலை நடத்துவது பொருத்தமில்லை.

தேர்தலுக்குச் செலவிடும் பணத்தைக் கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கலாம் என்பதுதான்.

அரசு இவ்வாறு கூறி வருவதால் ஏதாவது துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி எந்நேரமும் அரசு தேர்தலை ஒத்திப்போடக்கூடும் என்ற சந்தேகம் எதிர்க்கட்சிகளுக்கு இருந்து வருகின்றன. அவ்வாறு ஒத்திப்போட்டால் அதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பதென்று எதிர்க்கட்சிகள் ஏற்கனவே முடிவெடுத்துள்ளன.

அதன்படி ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றம் செல்வதற்கு முடிவெடுத்துள்ளது. ஜே.வி.பி. மக்களை வீதிக்கு இறக்கிப் போராட்டம் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது” – என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.