சுதந்திர தினத்தில் தமிழ் மக்கள் புதிய தீர்மானம் ஏற்க வேண்டும். டக்ளஸ் தெரிவிப்பு.

நாம் இலங்கையராகவும் தமிழராகவும் வாழ்வதையே பெரு பேறாகக் கருதுகின்றோம், அந்த விருப்பத்தை சுமந்து நிற்கும் ஒவ்வொருவருக்கும் 75ஆவது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என்று விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தேசிய நல்லிணக்கத்தின் வழியிலேயே நிலையான தீர்வை சாத்தியமாக்க முடியும் என்பதே எமது நம்பிக்கையாகும்.

இலங்கை எங்கள் தாய் நாடு அதை மதிப்பதுடன், பவள விழா ஆண்டாக எமது தாய் நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில் இலங்கையர்களாக நாம் அனைவரும் பெருமையுடன் முகமுயர்த்தி நிற்க வேண்டும்.

தேசத்தின் சுதந்திர தின நன்நாளை அவமதிப்பதும், அவதூறு சுமத்துவதும் அவரவரின் கொள்கை மீதான பலவீனத்தையும், அவரவர் கொண்டுள்ளதாய் கருதும் ஆற்றல் மீதான நம்பிக்கையீனத்தையும் வெளிப்படுத்துவதாகவே அமையும்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள எம்மக்களை திட்டமிட்டு மீட்பதற்காக பாடுபட காலச் சூழலிலும், எமது மக்களுகளின் அபிலாசைகளுக்கான பயணத்தை முன்னகர்த்துவதற்கான ஆற்றலையும் பயன்படுத்தாமல், கரிநாள் கதை கூறி வீண் விரையம் செய்வதும், கறுப்புக் கொடி ஏற்றுவோம் என்று அர்த்தமற்ற ஆர்ப்பரிப்புக் காட்டுவதும் ஈழத் தமிழர் வாழ்வில் எதையும் சாதித்துவிடாது.

அது அரசியல் சுயநலத்தின் உசுப்பேற்றும் நாடகத்தின் ஓர் அங்கமாகவே அமையும்.

தமிழ் மக்களை உரிமைகளுடனும், சமத்துவத்துடனும் முகமுயர்த்தி வாழச் செய்வதற்கு மாறாக, தொடர்ந்தும் தமிழர்கள் இருளில் தீராப்பிரச்சனைகளுடன் வாழ வேண்டும் என்று விரும்புகின்ற வீணர்களை தோற்கடிக்க தமிழ் மக்கள் புதிய தீர்மானம் ஏற்கவேண்டும்” என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.