மகளிர் டி20 உலக கோப்பை தொடர் தொடக்கம் – தென் ஆப்பிரிக்கா, இலங்கை இன்று மோதல்.

8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் இன்று முதல் 26-ம் தேதி வரை நடக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் நடக்க இருந்த இந்த போட்டி உலக கோப்பை கால்பந்து போட்டி காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இப்போது நடக்கிறது.

மொத்தம் 23 ஆட்டங்கள் கேப்டவுன், பார்ல், கெபேஹா ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசமும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் சன் லூஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி, சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியுடன் மோதுகிறது.

இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. இந்திய அணி தனது முதலாவது லீக்கில் பரம எதிரியான பாகிஸ்தானை நாளை (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கிறது. சமீபத்தில் முதலாவது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் இந்திய இளம் படை மகுடம் சூடி வரலாறு படைத்தது. அதேபோன்று சீனியர் போட்டியிலும் சாதிக்கும் உத்வேகத்துடன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தயாராகி வருகிறது.

அதே நேரத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளும் சவால் அளிக்கக்கூடியது என்பதில் சந்தேகமில்லை. உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.8¼ கோடியும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.4¼ கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Leave A Reply

Your email address will not be published.