உள்ளூராட்சி சபைத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி!

உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் திட்டமிட்டபடி எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்துவதற்குத் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கடமைப்பட்டுள்ளது என்றும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், உள்ளூராட்சி சபைத் தேர்தலைச் சட்டத்தின் அடிப்படையில் நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இந்த விடயத்தில் புதிய உத்தரவுகள் அவசியம் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்கள் எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை இடைநிறுத்துமாறு உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தர உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள், நிதிச் செயலாளர், பிரதமர், அமைச்சரவை செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மேலும், மேற்படி மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் ஆகியோரால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, லக்ஸ்மன் கிரியெல்ல, அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரினால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மேலும், சட்டத்தரணி சுனில் வட்டகல, எரங்க குணசேகர மற்றும் வி.சந்திரசேகரன் ஆகியோர் இடை மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதன்படி, மேற்கூறிய மனுக்கள் மீதான விசாரணையைத் தொடராதிருக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.

அண்மையில், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தேவையான அனைத்து நிதி மற்றும் ஏனைய வசதிகளையும் வழங்குமாறு சம்பந்தப்பட்ட சகல தரப்பினருக்கும் உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தில் சத்தியக் கடதாசி மூலம் கோரியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.