அரசின் வர்த்தமானி பிரகடனங்களால் எம்மைத் தடுக்க முடியாது! – தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவிப்பு.

“ஆட்சியாளர்களின் வர்த்தமானி அறிவித்தல்கள் ஊடாக எமது பணிப்புறக்கணிப்பைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. திட்டமிட்ட வகையில் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கின்றோம்.”

இவ்வாறு 47 தொழிற்சங்கங்களின் கூட்டான, தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பில் உள்ள அரச, அரச அனுசரணை பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்தப் பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

முயைற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி திருத்தப்பட வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் முக்கிய கோரிக்கை.

ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக வருமானம் பெறும் அனைவரிடமிருந்தும் 6 வீதம் முதல் 36 வீதம் வரை வரியை அறவிடுவதற்கு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளமையால், தொழிற்சங்கத்தினர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என்று குற்றச்சாட்டப்படுகின்றது.

அத்துடன், வங்கி வட்டி வீதத்தைக் குறைத்தல், 25 ஆயிரம் ரூபாவுக்கு வாழ்க்கைச் செலவு நிவாரணத்தை வழங்குதல், மின்சாரக் கட்டணத்தை குறைத்தல், ஓய்வூதியக் குறைப்பை உடனடியாக நிறுத்துதல் உள்ளிட்டவையும் பிற கோரிக்கைகளாக உள்ளன.

மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளும் தொழிற்சங்கக் கூட்டமைப்பில், அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள் , மின்சார பொறியியலாளர்கள், வங்கி சேவை ஊழியர்கள், பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், வீதி அபிவிருத்தி, கல்வி நிர்வாகம், நில அளவை திணைக்களம், வருமான வரி உள்ளிட்ட தரப்பினர் பங்காளர்களாக உள்னர்.

அத்துடன், அனைத்துப் பாடசாவைகளின் அதிபர், ஆசிரியர், தாதியர், சுகாதாரச் சேவை, தபால், அரச முகாமைத்துவ சேவைகள், சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் பணிப்பகிஷ்கரிப்புக்குப் பூரண ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் மூத்த விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,

”ஆட்சியாளர்களுடன் முன்னெடுத்த எந்த ஒரு பேச்சும் வெற்றி பெறவில்லை. ஆகவே, திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படுகின்ற பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் நாம் முழுமையாகப் பங்கேற்கின்றோம். அது நிச்சயமாக வெற்றிபெறும்” – என்றார்.

இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் ரஞ்சன் சேனநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்,

”எமது போராட்டம் மட்டுப்படுத்தப்படப் போவதில்லை. அது தொடர்ந்து முன்னெடுக்கப்படப் போகின்றது. இதனால் நாட்டின் நிலைமைகள் மேலும் மோசம் அடையும். ஆட்சியாளர்கள் அது பற்றிக் கரிசனை கொள்ளவேண்டும். அவ்வாறில்லாத ஆட்சியாளர்கள் பொறுப்பற்று இருப்பார்களானால் அவர்கள் முகங்கொடுக்க வேண்டிய பல பிரச்சினைகள் அடுத்து வரும் நாட்களில் அதிகரிக்கும் அபாயம் நிலைமைகளை உள்ளன” – என்றார்.

விசேட வைத்திய விரிவுரையாளர் சங்கத்தின் உறுப்பினர் பேராசிரியர் இந்திக்க கருணாதிலக்க கருத்துத் தெரிவிக்கையில்,

”சிறந்த, தீர்வொன்று ஆட்சியாளர்களால் வழங்கப்படும் என்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கு எவ்விதமான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. ஆகவே, போராட்டத்திற்கு எமது சங்கம் ஆதரவை வெளியிடுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது” – என்றார்.

நாட்டின் தேசிய நீர் வளங்கள் வடிகால் அமைப்பு சபையின் வரி செலுத்துவோரின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாடாளர் மஞ்சுளா பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்,

”தொழிற்சங்கத்தின் நியாயமான போராட்டச் செயற்பாடுகளில் நாம் ஈடுபடுகின்றோம். அதனடிப்படையில் நாம் சகல அரச கருமச் செயற்பாடுகளிலிருந்தும் விலகி நிற்கின்றோம். இதனால் நாட்டின் சில இடங்களில் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்படும்” – என்றார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமல் விஜயசிறி கருத்துத் தெரிவிக்கையில்,

”ஆட்சியாளர்களுடனான பேச்சு தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் திட்டமிட்டபடி போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கு எமது சங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்குகின்றது. அதேநேரத்தில் அத்தியாவசிய அவசர சிகிச்சைகளை முன்னெடுப்பதற்கு வைத்தியர்கள் நிச்சயமாக ஒத்துழைப்புகளை வழங்குவார்கள். அந்தவகையில் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பைத் தொடர்ந்தும் முன்னெடுப்போம்” – என்றார்.

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜலால் கருத்துத் தெரிவிக்கையில்,

”மின்சார சபை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டால் நிச்சயமாக நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரமும் முடங்கும் அபாயமே காணப்படுகின்றது. அவ்வாறு இருக்கின்ற போது நியாயமான கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் உடனடியாகத் தீர்த்து தரவேண்டும் என்பதே நமது வலியுறுத்தலாக உள்ளது” – என்றார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்துத் தெரிவிக்கையில்,

”ஆட்சியாளர்கள் மக்கள் பக்கம் நின்று சிந்திக்காது தனது இருப்பை மையப்படுத்தியே சிந்திக்கிறது. இதனால் சாதாரண மக்களின் நிலைமைகள் மிகவும் மோசமடைந்துள்ளன. இந்நிலையில் தான் இந்தப் போராட்டத்தில் அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று எதிர்ப்பய் வெளிப்படுத்துகின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.