மகப்பேறு லீவில் இருந்த பெண்ணை பணிநீக்கம் செய்த மெட்டா நிறுவனம்

மகப்பேறு விடுமுறையில் இருந்த பெண்ணை பணிநீக்கம் செய்துள்ளது மெட்டா நிறுவனம்.

வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் தளங்களை இயக்கி வரும் மெட்டா நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மெட்டா, நிறுவனத்தில் பணியாற்றும் 13 சதவீத (11,000) ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இந்த நடவடிக்கையானது போதிய வருமானமின்மை, செலவுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து எடுக்கப்பட்டதாக மெட்டா தெரிவித்திருந்தது.

இந்நிலையில் 2 ஆம் கட்டமாக மேலும் 11 ஆயிரம் ஊழியர்களை மெட்டா பணி நீக்கம் செய்ய உள்ளதாக ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டிருந்தது. முதற்கட்ட பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 4 மாதங்களில் மீண்டும் பணி நீக்கம் என்ற அறிவிப்பு உலகம் முழுவதும் உள்ள மெட்டா ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

பணிநீக்கம் குறித்து மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் ஊழியர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், “தற்போது பணியில் இருக்கும் 10 ஆயிரம் ஊழியர்களின் பணியிடங்கள் மற்றும் காலியாக இருக்கும் 5 ஆயிரம் வேலைவாய்ப்புகள் முழுமையாக நீக்கப்படுகிறது. இந்த பணிநீக்க நடவடிக்கைகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அறிவிக்கப்படும். மேலும் சில சந்தர்ப்பங்களில் பணி நீக்கம் ஆண்டின் இறுதி வரை தொடரும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

தொழில்நுட்பக் குழுவில் மறுசீரமைப்பு ஏப்ரல் பிற்பகுதியில் அறிவிக்கப்படும் என்றும் வணிகக் குழுக்களுக்கான பணிநீக்கம் மே மாதத்தில் வரும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மெட்டாவின் ஆட்சேர்பு குழுவின் மூத்த அதிகாரியான ஆண்டி ஆலன் என்ற பெண் லிங்க்டின் இணையதளத்தில், மெட்டாவின் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் குறித்து எழுதியுள்ளார்.

அதில், “மகப்பேறு விடுமுறையில் இருந்த என்னை மெட்டா பணிநீக்கம் செய்துள்ளது. மெட்டாவின் தலைமை குழு, அவர்களுக்காக உழைத்த ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் அளவிற்கு எப்படி தவறாக கணக்கிட்டது என எனக்குப் புரியவில்லை. ஆனால் இன்னும் அவர்கள் தங்களிடம் வேலை செய்பவர்கள் மீது அக்கறை கொண்டிருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக 4 மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட மெட்டாவின் பணிநீக்கத்தால் தனக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த ஆண்டி ஆலன் தனது நிம்மதியையும் பதிவு செய்திருந்தார்.

அதில், “மெட்டா பணிநீக்கம் தொடர்பாக சோதனை நடத்திய அனைவருக்கும் நன்றி. எனது பணி பாதிக்கப்படவில்லை என்பதை அறிந்துகொண்டேன். இன்னும் 3 வாரங்களில் எனக்கு குழந்தை பிறக்க உள்ள நிலையில் மெட்டாவில் எனது பணி தொடர்வதை நினைத்து நான் நிம்மதியடைகிறேன்.

நான் மெட்டாவில் பணிபுரிவதை உண்மையாக விரும்புகிறேன். எனது குழு, எனது மேலாளர்கள் மற்றும் IDC இல் நாங்கள் பணியமர்த்தும் புத்திசாலி மற்றும் ஆர்வமுள்ள நபர்களை நான் விரும்புகிறேன். பாதிக்கப்பட்ட எனது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்காக வருந்துகிறேன்.

உங்களது அடுத்த பயணத்திற்காக எனக்குத் தெரிந்த தொடர்புகளில், நான் உங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் எனக்கு தெரியப்படுத்துங்கள். எதுவாக இருந்தாலும், நீங்கள் இன்னும் மதிக்கப்படுகிறீர்கள் மற்றும் ஆதரிக்கப்படுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்தசூழலில் இரண்டாவது பணி நீக்கத்தில் ஆண்டி ஆலன் நீக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.