ஆவின் நிறுவனத்துக்கு பால் அனுப்ப மறுத்து சாலையில் பாலை கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 33 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினருடன் பால் வளத்துறை அமைச்சர் நாசர் நடத்திய பேச்சுவார்த்தை நேற்று தோல்வியில் முடிவடைந்தது.

இதையடுத்து அறிவித்தபடி, இன்று முதல் பால் உற்பத்தியாளர்கள் தமிழக அரசின் ஆவின் நிர்வாகத்திற்கு பால் வழங்காமல் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், பாலை சாலையில் கொட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சேலம் மாவட்டம், பாகல்பட்டியில் பால் வழங்க மறுத்து போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் ஆவின் துணை பொதுமேலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதேபோன்று மதுரையில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் ஆவினுக்கு 30 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் தடைபட்டுள்ளது.

இதனிடையே, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள பால் பண்ணையில் பால் விநியோகம் வழக்கம் போல் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் சுமார் 500- க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலமாகவும், தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக தமிழக அரசின் ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் செய்யபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.