சிரியாவில் அலெப்போ சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல்.

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா தங்களின் ராணுவ நிலைகளை குறிவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துவதாக கூறுகிறது.

இந்த விவகாரத்தில் சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்த நிலையில் சிரியாவின் வடக்கு பகுதியில் அலெப்போ மாகாணத்தில் உள்ள அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதிகாலை நேரத்தில் இஸ்ரேல் போர் விமானங்கள் அடுத்தடுத்து பல ஏவுகணைகளை வீசின. எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.

அதே சமயம் ஏவுகணைகள் தாக்கியதில் விமான நிலையம் பலத்த சேதம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு சர்வதேச நாடுகளிடம் இருந்து மனிதாபிமான உதவிகள் வந்து சேரும் முக்கிய வழித்தடமாக அலெப்போ சர்வதேச விமான நிலையம் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.