உடல் உறுப்புகளை தானம் கொடுத்து மறைந்த 19 வயது விஹகனா


மூளைச்சாவு அடைந்த 19 வயதுடைய பாடசாலை மாணவி
விஹகனாவின்
கடைசி ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்.

குருநாகல் மாவட்டத்தின்  நிக்கவெரட்டிய பகுதியில் மூளை புற்று நோய் காரணமாக மூளைச்சாவடைந்த மாணவியொருவர் தனது உடல் உறுப்புகளை வழங்கி 7 பேரின் உயிரை காப்பாற்றிய  சம்பவமொன்று மனதை நெகிழ்ச்சியடையவைத்துள்ளது.

இறந்த விஹகனா குடும்பத்தின் அனுமதியுடன் இதயம் மற்றும் நுரையீரல்கள் ஆகியவை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் ஒருவருக்கு, ஒரே நேரத்தில் பொருத்தப்பட்டு அவர் குணமடைந்து வருவதாக சத்திரசிகிச்சையில் கலந்துகொண்ட விசேட வைத்தியர் ஒருவர் ஊடங்களிடம் தெரிவித்தார்.

இந்நாட்டு மருத்துவ வரலாற்றில் இதய நோய் மற்றும் நுரையீரல் கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு இந்த உறுப்புகள் பொருத்தப்படுவது இதுவே முதல்முறை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய வைத்திய நிபுணர்கள் குழுவும், இலங்கை வைத்திய நிபுணர்கள் குழுவும் ஒரே நேரத்தில் இதயம் மற்றும் நுரையீரலை இந்த மயக்க மருந்து நிபுணருக்கு பொருத்தியுள்ளனர்.

இந்த அறுவை சிகிச்சையின் வெற்றிக்கு, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சுகாதார அமைச்சு உயர் அதிகாரிகளின் அதிகபட்ச பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மூளைச்சாவு அடைந்த மாணவியிடம் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவை சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டதுடன், அந்த மூன்று நோயாளிகளும் குணமடைந்து வருவதாக சிறப்பு மருத்துவர் கூறினார்.

இந்த மாணவியின் எலும்பு மஜ்ஜையும் நோயாளிகளுக்கு பொருத்துவதற்காக பெறப்பட்டுள்ளது.

மாணவி உயிருடன் இருக்கும் போது , அவரது கண்களை தானமாக வழங்கியிருந்த உறுதிமொழியின் பிரகாரம் இரண்டு கண்களும் இலங்கை கண் மருத்துவ சங்கத்திற்கு தானமாக வழங்கப்பட்டதுடன் , பார்வையற்ற இருவருக்கு விரைவில் உலகை பார்க்கும் பாக்கியம் கிடைக்கும்.

இவ்வாறு உறுப்பு மாற்று சிகிச்சைக்காக பெறப்பட்ட உடல் உறுப்பு பகுதிகள் , நிகவெரட்டிய அம்பன்பொல எனும் பகுதியில் வசித்த ஏ. எச். டி. விஹகனா நுவன்மினி ஆரியசிங்க என்ற மாணவியினுடையதாகும்.

குருநாகல் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைக்குள் ஏற்பட்ட புற்றுநோய் கட்டி காரணமாக மாணவி மூளைச்சாவு அடைந்தார்.

மாணவி விஹகனா, குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியில் கல்வி பயின்ற மாணவி என்பதுடன், அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பாடங்களில் ஆங்கில மொழியில் எழுதி பெறுபேறுகளுக்காகக் காத்திருந்துள்ளார்.

எதிர்பாராத தருணத்தில் உடல் நலமின்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விஹகனாவின் தலையில் உருவாகியிருந்த கட்டியொன்று காரணமாக , மரணிக்கலாம் என உணர்ந்ததும் ,   பல்கலைக்கழகத்தில் படித்து வரும்  தனது சகோதரியிடமும், தந்தையிடமும் தான் இறந்தால் தனது உடல் உறுப்புகளை தானாமாக கொடுத்துவிடுமாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்த தகவலை  விஹகனாவின் தந்தை  ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

குடும்பத்தில் கடைசிக் குழந்தையான விஹகனா பலர் வாழ்வில் ஒளியேற்றிவிட்டு கண் மூடியுள்ளார்.

அப்பா, நான் இறந்துவிட்டால் என் உடல் உறுப்புகளை தானம் கொடுத்துவிடுங்கள்


விஹகனாவின்
ஆத்மா சாந்தியடைய நாமும் வேண்டுகிறோம்
.

Leave A Reply

Your email address will not be published.