அமெரிக்கக் கப்பலில் தப்பிய 4 தமிழ் இளைஞர்கள் கைது!

கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கக் கப்பலில் சட்டவிரோதமாக ஏறியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட வடக்கு இளைஞர்கள் நால்வரும், மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தால் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த 25 வயது முதல் 32 வயதுக்கு இடைப்பட்ட நான்கு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

குறித்த கப்பல் கடந்த மாதம் 24 ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்ததுடன் அது மறுநாள் ஐரோப்பா நோக்கிப் பயணத்தை ஆரம்பித்திருந்தது.

பின்னர், சுயஸ் கால்வாயில் நுழையும் போது, கப்பலில் பணியாளர்கள் முன்னர் அறிந்திராத நான்கு பேர் இருப்பதைக் கண்டு, தங்களது நிறுவனத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கடந்த மாதம் 28 ஆம் திகதி குறித்த இளைஞர்களின் அடையாள அட்டைகளைப் பரிசோதித்தபோது அவர்கள் இலங்கையர்கள் எனக் கப்பலின் பணிக்குழாமினர் உறுதிப்படுத்தி இலங்கைக்கு அருகில் பயணிக்கவிருந்த மற்றுமொரு கப்பலிடம் அவர்களை ஒப்படைத்தனர்.

பின்னர் நேற்று குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் வழங்கிய அறிவித்தலின்படி, கடற்படை, பொலிஸ் மற்றும் துறைமுகங்கள் அதிகார சபை ஆகியவற்றின் அதிகாரிகள் குழுவொன்று விசேட படகொன்றில் குறித்த கப்பலுக்குச் சென்று அவர்களைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் திருமணமானவர் என்றும், கொழும்புத் துறைமுகத்தில் பொறியியல் சேவைகளை வழங்கும் நிறுவனம் ஒன்றின் பெயரில் துறைமுகத்துக்குள் அவர்கள் நுழைவதற்கான அனுமதிப்பத்திரங்களை எடுத்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் கடந்த மாதம் 25ஆம் திகதி முற்பகல் தொழிலாளர்கள் அணிந்திருந்த ஆடை மற்றும் தலைக்கவசங்களை அணிந்து இந்தக் குழுவினர் கப்பலுக்குள் நுழைந்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட பின்னர் அவர்களுக்கான உணவு மற்றும் தங்குமிட வசதிகளை கப்பல் பணியாளர்கள் வழங்கியுள்ளனர்.

எவ்வாறாயினும், அவர்கள் கொழும்பு துறைமுகத்துக்குள்ளும் மற்றும் கப்பலுக்குள்ளும் பிரவேசிக்க உதவிய நபர்களைக் கண்டறிய விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.