தலைவர் பதவி போனால் சொந்த ஊருக்கே சென்று விடுவேன்- அண்ணாமலை.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியதாவது:- ஊழலை எதிர்க்க ஆரம்பித்தால் ஒரு கட்சியை மட்டும் எதிர்க்க முடியாது. மொத்தம் எதிர்க்க வேண்டும். மண் லாரி, தண்ணீர் லாரி பயத்தை எல்லாம் என்னிடம் காட்ட முடியாது.

கூடுதல் பாதுகாப்பு வாங்கி வைத்துள்ளேன். அதிகபட்சம் புழல் சிறையில் சில நாட்கள் என்னை அடைத்து வைக்க முடியும். நான் தலைவராக இருக்கும் வரை இப்படித்தான் செயல்படுவேன்.

யார் தயவிலும் பாராளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. நான் தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை. ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பேன்.

என்னை மாற்ற நினைத்தால் டெல்லிக்கு சென்று என்னை தலைவர் பதவியில் இருந்து மாற்றுங்கள். சென்னை எனக்கு சொந்த ஊர் கிடையாது. அரசியலுக்காகத்தான் இங்கு வந்து இருக்கிறேன்.

தலைவர் பதவி போனால் சொந்த ஊருக்கே சென்று விடுவேன். “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் ஊழலை எதிர்த்து ஜூலை மாதம் பாத யாத்திரை நடத்தப்படும். ஊழல் செய்து கோடி கோடியாக பணம் சேர்த்து அடுத்த தேர்தலுக்கு செலவு செய்வதற்காக வைத்திருக்கிறார்கள்.

அடுத்த தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை கொடுப்பார்கள். எனவே பொதுமக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

அதற்காகத்தான் பாத யாத்திரையாக வருகிறேன். எங்களுக்கு ஓட்டு கேட்டு வரவில்லை. தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும். தமிழகம் முன்னேற நீங்கள் விழித்தெழ வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தவே பாத யாத்திரை வருகிறோம். இந்த பாத யாத்திரையில் நீங்கள் எல்லோரும் பங்கேற்க வேண்டும். இது ஊழலுக்கு எதிரான போராட்டம்.

பா.ஜனதா தொண்டர்கள், எல்லோரும் இதில் கலந்து கொள்வார்கள். என் மண் என் மக்கள் இணையதளத்தில் பதிவு செய்து பாத யாத்திரையில் கலந்து கொள்ளலாம். இதில் ஒருநாள் முழுவதும் பங்கேற்க வேண்டும் என்பதில்லை. ஒரு மணி நேரம் கூட கலந்து கொள்ளலாம்.

ஊழலுக்கு எதிராக போராட வேண்டிய பங்கு உங்களுக்கு உள்ளது. என்னை மிரட்டி பார்க்கிறார்கள். பா.ஜ.க.வினரை வழக்கில் சிக்க வைக்க பார்த்தார்கள். பொருளாதார குற்றப்பிரிவுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி பாருங்கள்.

பிரதமர் மோடி சென்னை வந்த போது அவர் என்னை கர்நாடக தேர்தலை கவனிக்க அறிவுறுத்தினார். எனவே சென்னை வந்தபோது பிரதமர் மோடியை சந்திக்கவில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.