ஆடியோ சர்ச்சை குறித்த பழனிவேல் தியாகராஜனின் விளக்கத்தை யாரும் ஏற்க மாட்டார்கள் – அண்ணாமலை

தமிழகத்தின் நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் உள்ளார். கருத்துகளை புள்ளிவிவரங்களுடன் துல்லியமாக பேசுவதன் மூலம் பெயர் பெற்றவர். அதேநேரத்தில் சமூக வலைதளங்களில் காட்டமான வார்த்தைகளைப் பயன்படுத்தி எதிர்கருத்து கொண்டவர்களை விமர்சிக்கிறார் என்று விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 26 விநாடிகள் கொண்ட ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியானது.

அந்த வீடியோவில், ‘உதயநிதி, சபரீசன் சொத்துகள் குறித்து பேசியது போல இருந்தது. அந்த ஆடியோவை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அக்கட்சி எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டவர்கள் பகிர்ந்திருந்தனர். இதுகுறித்து தி.மு.க விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திவந்தனர்.

இந்தநிலையில், ஆடியோ விவகாரம் குறித்து பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘தான் பேசியதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் ஆடியோ எளிதாக கிடைக்கும் நவீன தொழில்நுட்பம் மூலம் இட்டுக்கட்டப்பட்டது. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இனிவரும் காலங்களில் ஆடியோ, வீடியோக்கள் வெளியாவதில் ஆச்சரியமில்லை.

எந்த ஒரு ஜனநாயக நாட்டுக்கும் பேச்சு சுதந்திரம் மிகவும் அவசியம் என்று உறுதியாக நம்புவன் நான். எனக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான நான் ஒருபோதும் காவல்துறையில் வழக்குத் தொடர்ந்ததில்லை. என்னுடைய மூதாதையர்கள் குறித்து தவறாக பேசியதற்காக மட்டும் ஒரே ஒருமுறை எதிர்கட்சி எம்.எல்.ஏ மீது வழக்குத் தொடர்ந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் என் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. சிறிய குற்றச்சாட்டுகள் முதல் பெரிய அளவிலான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுவருகின்றன.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு நான் ஒருபோதும் எதிர்வினை ஆற்றியதில்லை. பொதுத்தளங்களில் கிடைக்கும் தொழில்நுட்பங்கள், அந்த ஆடியோ க்ளிப் நம்பகத்தன்மை கொண்டது அல்ல என்று தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ இட்டுக்கட்டப்பட்டது. தற்போது கிடைக்கும் எளிய தொழில்நுட்பத்தின் மூலம் இதுபோன்ற ஆடியோ, வீடியோ வெளியானால் ஆச்சர்யப்படுவதற்கில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

பழனிவேல் தியாகராஜன் விளக்கம் குறித்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் ட்விட்டர் பதிவில், ‘சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு தினங்களாக தி.மு.க ஐ.டி விங்கைச் சேர்ந்தவர்கள் கொடுத்த அரைகுறை விளக்கத்தைப் படித்துவிட்டு அமைச்சர் பி.டி.ஆர் அறிக்கையை தயார் செய்து வெளியிட்டுள்ளார்.

தி.மு.க ஐ.டி பழனிவேல் தியாகராஜனின் விளக்கத்தை தி.மு.க ஐ.டி விங்கைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறுயாரும் நம்பமாட்டார்கள். ஆடியோ கிளிப் தொடர்பான சுயேட்சையான தடயவியல் சோதனைக்கு அழைப்புக்கு விடுக்க அமைச்சர் பி.டி.ஆர் தடுப்பது எது? வருடத்திற்கு 30,000 கோடி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏராளம் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.