பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை – அதிமுக பொதுச்செயலாளர்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானபிறகு முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி நேற்று (புதன்கிழமை) டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என தெரிவித்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை என கூறினார்.

மேலும் தான் பொதுச்செயலாளர் என்பதை நீதிமன்றம் அங்கீகரித்துவிட்டதாகவும் அதிமுக தங்களிடம் தான் உள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து பிடிஆர் ஆடியோ குறித்து பேசிய அவர், அவர் பேசியது உண்மையாக இருந்தால் அது நிச்சயம் ஆபத்தானது என்றும், அந்த ஆடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை பொருட்படுத்தாமல் விடக்கூடாது என தெரிவித்தார்.

மேலும் கோடநாடு கொலை கொள்ளை வழக்கை அதிமுக முறையாக விசாரணை செய்தது எனவும், குற்றவாளிகளை ஜாமீனில் எடுத்தது திமுக தான் என குற்றம்சாட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.