ஒரே நேரத்தில் டெல்லியில் முகாமிடும் தலைவர்கள்…!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி சென்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கிறார். திமுகவின் மறைந்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கும் சென்னை கிண்டியில் அமையவிருக்கும் பன்னோக்கு அரசு மருத்துவமனை உள்ளிட்ட திமுகவின் முக்கிய திட்டங்களுக்கு திறப்பு விழாவை நடத்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிற்கு முறைப்படி அழைப்பு விடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.

மேலும் இந்த சந்திப்பின் போது, ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடுகள் தொடர்பாகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்வது, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது, மதம் மாறிய பட்டியலினத்தவருக்கு இடஒதுக்கீடு அளிப்பது உள்ளிட்டவை குறித்து குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர்களையும் சந்திப்பார் என கூறப்படுகிறது.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானபிறகு முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி நேற்று (புதன்கிழமை) டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பில் தமிழக பாஜக, அதிமுக இடையேயான பிணக்குகள் தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக, நாம் பிரிந்து இருந்தால் எதிரிகளுக்கு வெற்றி எளிமையாகிவிடும் என எடப்பாடி பழனிச்சாமி அமித் ஷாவிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் விரிவாக ஆலோசித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் டெல்லியில் உள்ளார். தமிழக அரசுடன் மோதல் போக்கையே கடைபிடித்து வரும் ஆளுநர் ரவி, அன்மையில் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். இந்த சூழலில் தான் நேற்று காலையிலேயே சென்னையில் இருந்து விமானம் மூலமாக 3 நாள் பயணமாக ஆளுநர் டெல்லி புறப்பட்டார். இந்த பயணத்தின் போது குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆளும் திமுக தொடர்பாக எதிர்க்கட்சியினர் அளித்த பல்வேறு புகார்கள் குறித்து, உள்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் டெல்லி செல்ல இருப்பது தமிழ்நாடு அரசியலில் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.