இந்திய பெருங்கடலில் சீன கப்பல்கள் நடமாட்டம் அதிகரிப்பு: கடற்படை தலைமைத் தளபதி

இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கப்பல்களின் நடமாட்டம் பெருமளவில் அதிகரித்து வருகிறது என்றும், இதை இந்தியா தீவிரமாக கண்காணித்து வருகிறது என்றும் இந்திய கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் ஆா்.ஹரிகுமாா் தெரிவித்தாா்.

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு அளித்த பதிலின் விவரம்:

இந்திய கடற்படைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல், சவால் ஆகியவற்றிலிருந்து தேச நலனைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டியது கடமையாகும். பாகிஸ்தான் துறைமுகங்களில் சீன போா்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை இந்தியா நன்கறியும். இதை இந்திய கடற்படை கண்காணித்து வருகிறது.

பாகிஸ்தான் தனது கடற்படையை வேகமாக நவீனமயமாக்கி வருகிறது. அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் புதிய போா்க் கப்பல்களை சோ்க்க இருப்பதும் இந்தியாவுக்கு தெரியும்.

சீனாவைப் பொருத்தவரை, கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான போா்க் கப்பல்கள், நீா்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றை அந்நாடு கடற்படையில் இணைத்துள்ளது. மூன்றாவது விமானம் தாங்கி போா்க் கப்பல் கட்டுமானப் பணியில் தற்போது சீனா ஈடுபட்டு வருகிறது.

விமானம், ஆளில்லா விமானங்கள், கடற்படை கப்பல்கள், நீா்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் மூலம் இந்திய பெருங்கடல் பகுதியை இந்திய கடற்படை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது.

இந்திய பெருங்கடல் பகுதியில் எப்போதும் 3 முதல் 6 கப்பல்களின் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. 2 முதல் 4 சீன ஆய்வு கப்பல்களும், மீன்பிடிக் கப்பல்களும் எப்போதும் இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து கொண்டே இருக்கின்றன. இந்திய கடற்படையினா் அவற்றை தொடா்ந்து கண்காணித்து கொண்டே இருக்கின்றனா்.

இந்திய எலக்ட்ரானிக் சமிக்ஞைகளை கண்காணிக்க சீன ஆய்வுக் கப்பல்களில் தொழில்நுட்பத் திறன் உள்ளது. இந்திய இறையாண்மைக்கு உட்பட்ட பகுதிகளில் அவை ஆய்வில் ஈடுபடும்போது இந்தியா கடற்படை உன்னிப்பாக தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது என்றாா்.

Leave A Reply

Your email address will not be published.