விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் 24 காவலர்கள் பணியிட மாற்றம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கி கொடூரமாக துன்புறுத்தியதாக உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது பாதிக்கப்பட்ட 8-க்கும் மேற்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

இந்த விவகாரம் மாநில அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏ.எஸ்.பி-யாக இருந்த பல்வீர் சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, இந்தப் புகார் தொடர்பாக உதவி ஆட்சியர் விசாரணை நடத்தினர். அவருடைய விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்புகள் குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். அதனைத் தொடர்ந்து, இந்தப் புகார் தொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான அமுதா விசாரணை நடத்தினார்.

இதற்கிடையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் பெருமாள், சந்திர மோகன், ராஜகுமாரி ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இதே போல காவல் உதவி ஆய்வாளர் சக்தி நடராஜன், காவலர்கள் மணிகண்டன், சந்தனகுமார் ஆகியோரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

இதுகுறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா இரண்டு கட்டமாக விசாரணை நடத்திய நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வேதநாராயணன், பாபநாசம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஆகியோர் அளித்த புகார்களின் பேரில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மற்றும் சில போலீஸார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்தநிலையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கோட்டத்திற்கு உட்பட்ட காவல்நிலைய காவலர்கள் 24 பேரை பணியிட மாற்றம் செய்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.