புதுக்குடியிருப்பில் சிறுமி கடத்தல்: குடும்பத் தகராறே சம்பவத்துக்குக் காரணம்!

புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் சிறுமி கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, சிறுமியைக் கடத்தவில்லை என்றும், தந்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க சிறுமியை அவரிடம் அழைத்துச் செல்ல முற்பட்டதாகவும் கைதான இளைஞர் பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் நேற்றுமுன்தினம் காலை, பெண்மணி ஒருவர் தனது 10 வயதுச் சிறுமியை தனியார் கல்வி நிறுவனத்தில் இறக்கியுள்ளார். அதேநேரம் மோட்டார் சைக்கிளில் வந்த 23 வயது இளைஞர் ஒருவர் சிறுமியைக் கடத்திச் செல்ல முற்பட்ட வேளை பொதுமக்கள் இளைஞரை மடக்கிப் பிடித்து பொலிஸிடம் ஒப்படைத்தனர்.

கைதான இளைஞரிடம் புதுக்குடியிருப்புப் பொலிஸார் விசாரணை நடத்திய போது, சிறுமியின் தந்தையார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சிறுமியை அழைத்துச் செல்லவே முற்பட்டதாக இளைஞர் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் குடும்பத் தகராறு காரணமாக ஒன்றரை வருடங்களாகப் பிரிந்து வாழ்கிறார்கள். தனது பிள்ளையைப் பார்க்க மனைவி அனுமதிப்பதில்லை என்று குறிப்பிட்டு, சிறுமியின் தந்தை தன்னிடம் உதவி கோரியதாக இளைஞர் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் தந்தையும், கைதான இளைஞரும் நண்பர்கள். தனியார் வகுப்புக்கு வரும் போது, சிறுமியை அழைத்து வருமாறு தந்தை கேட்டதால், சிறுமியை அழைத்துச் செல்ல முற்பட்டதாகவும், சிறுமிக்குத் தன்னைத் தெரியாதால் கத்தி சத்தமிட்டதாகவும் இளைஞர் விசாரணைகளில் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.