கால்பந்து மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்கள் – நெரிசலில் சிக்கிய 12 பேர் உயிரிழப்பு.

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று எல் சால்வடார். இந்த நாட்டின் தலைநகர் சான் சால்வடாரில் கஸ்கட்லான் கால்பந்து மைதானம் உள்ளது. இங்கு சல்வடார் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

தொடரில் காலிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதனை காண வந்த ரசிகர்கள் டிக்கெட் வைத்திருந்தும், மைதானத்தினுள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.இதன் காரணமாக ஆத்திரமைடந்த ரசிகர்கள் குறிப்பிட்ட நுழைவு வாயிலை தகரத்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். இதனால் மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமுற்றனர்.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைய முயன்றதை அடுத்து, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

“சிறிய நுழைவு வாயில் வழியே உள்ளே செல்ல ஒரே சமயத்தில் அதிக ரசிகர்கள் முயற்சி செய்தனர். நானும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டேன். என்னை பலர் மிதித்தனர். எனினும், அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தவர்கள் என்னை காப்பாற்றினர். பலர் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்ட நிலையில், எனது கண் முன்னே இரண்டு பேர் உயிரிழந்தனர்,” என்று போட்டியை காண வந்த ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த எல் சால்வடார் அதிபர் நயிப் புகலே உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.