புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்படவில்லை? நந்திக்கடல் முன்னரங்கில் இருந்த ஊடகவியளாளர் சுஜித் விதான பத்திரன

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது ஒரு தரப்பினரின் கருத்தாக உள்ளது.

மற்றொரு தரப்பினரோ , பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டதாக கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆனால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை ஜனநாயகக் குடியரசின் உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவிக்கின்றது.

ஆனால் போர் முடிவுக்கு வந்த கடைசி நாளில் ,  உண்மையில் என்ன நடந்தது என , அன்றைய போர் கால செய்திகளை உடனுக்குடன் வழங்கிக் கொண்டு  நந்திக்கடல் முன்னரங்கில் இருந்த ஊடகவியளாளர்
சுஜித் விதான பத்திரனவி
ன்  நேர்காணலின் பதிவு இது

 உலக கருத்து

 ஒரு காலத்தில் தேசத்துரோகியானவன், இன்னொரு காலத்தில் தேசபக்தனாகவும், தேசிய வீரனாகவும் இருப்பான்.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது தேசத்துரோகப் பிரிவின் கீழ் வீழ்ந்த வீரபுரங் அப்பு மற்றும் கொங்காலேகொட பண்டாக்கள் , பிற் காலத்தில் தேசிய வீரர்கள் ஆனார்கள்.

ஒரு தேசத்திற்கு துரோகியானவன் மற்றொரு தேசத்திற்கு ஹீரோவாக இருப்பான்.
இதுவே ஒரு பொது விதியாக உள்ளது.

ஒரு சிறிய உதாரணம், யூதர்களின் எமனாக இருந்த அடோல்ஃப் ஹிட்லர், நாசிகளின் மீட்பர் எனக் கொண்டாடப்பட்டார். (இன்றும் ஜெர்மனியில் ஹிட்லரின் விசுவாசிகள் உள்ளனர்.)

அந்தக் கோட்பாடு நமக்கு மட்டுமே பொதுவான ஒன்று அல்ல. (நம் நாட்டில் இல்லாவிட்டாலும்) ஏதோ ஒரு வகையில் சாதாரண மனித நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டவர்களின் (புரூஸ் லீ போன்ற) மாறுபட்ட தன்மைகள் பற்றி கண்டறிய விசாரணைகள் நடத்தப்படுவது உண்மைதான். மேலும், அவர்கள் இறந்த விதம் குறித்தும் (இறந்து நீண்ட நாட்களாகியிருந்தாலும்) விசாரணைகளை மேற்கொண்டே வருகின்றனர். நெப்போலியன், ரஸ்புடின், ஹிட்லர், சே குவேரா, முகமது மவ்மர் கடாபி மட்டுமின்றி, எகிப்தின் பாரோக்களின் சர்ச்சைக்குரிய மரணங்கள் (இறப்புகள்) குறித்தும்  இன்றுவரை கவலைப்படும் தரப்பினர் இருக்கவே செய்கின்றனர். எமது நாட்டின் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணமும் அவைகள் போன்றே சர்ச்சைக்குரிய ஒன்றாகும்.

  • அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பது ஒரு தரப்பினரின் கருத்தாக உள்ளது.
  • மற்றொரு தரப்பினரோ , அவர் தற்கொலை செய்து கொண்டதாக கருத்து தெரிவிக்கின்றனர்.
  • ஆனால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை ஜனநாயகக் குடியரசின் உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவிக்கின்றது.

முப்பது வருட யுத்தத்தை வழிநடத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ள பிரபாகரன் இறந்து 2023.05.18ம் திகதிக்கு பதினான்கு (14) வருடங்கள் கடந்துவிட்டன , ஆனால் அவரது மரணம் குறித்து மேலே சொல்லப்பட்ட கருத்துகளை சிலர் அவ்வப்போது சமூகமயமாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.

பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது புலித் தலைவர் பிரபாகரனை “ஸ்னைப்பர்” துப்பாக்கிதாரி சுட்டுக் கொன்றார் என்ற அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கருத்தை நிராகரிக்கும் ஆராச்சியாளர் சச்சி ஸ்ரீகாந்தன், புலித் தலைவரின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த சயனைட்டை அருந்தி , அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று பகுத்தறிவுடன் கருத்தொன்றை சமர்ப்பிக்கிறார். 

அதற்குச் சான்றாக, சாகும்வரை புலித் தலைவரின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த சயனைட் குப்பி , இறந்த பிரபாகரனின் கழுத்தில் இருக்கவில்லை என்பதை அவர் ஆதாரமாக  சுட்டிக்காட்டுகிறார். அடுத்து இறந்த அவரது உடல் ஊதா நிறத்தில் இருந்தது என்கிறார்.

“பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டார் என்பதை நிரூபிக்க முடியாது. ஆனால் நிச்சயமாக அப்படி நம்பலாம்” என்கிறார் அவர்.

Prabhakaran committed suicide cannot be provable, but is certainly believable என்கிறார் அவர்.

மரணம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட மூன்று கருத்துக்களில், “அவர் இன்னும் மறைந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்” என்ற தமிழர்களின் கருத்தை அவர் முற்றாக நிராகரிக்கிறார்.

“பிரபாகரன் எங்கிருந்தோ மீண்டும் தோன்றி மில்லியன் கணக்கான மக்களை ஆச்சரியப்படுத்துவார் எனும் அதிசயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.  நான் ஒரு விஞ்ஞானி. நான் பெறும் தரவை ஆராய்ந்து முடிவுகளை எடுக்கிறேன். எனவே நான் அப்படித்தான் யூகிக்கிறேன். சில விசாரணைகளுக்குப் பிறகு அல்லது சரியான தரவு கிடைத்தால், அனுமானங்கள் அதற்கேற்ப மாற்றப்படும்” என்று கூறும் , சச்சி ஸ்ரீகாந்தன் , அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி பிரபாகரன் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மரணித்திருக்க முடியாது என சந்தேகத்திற்கு இடமின்றி புலப்படுகிறது எனக் கூறுகிறார்.

அதற்குக் காரணம், 2009 மே மாதம் , புலிகளின் தலைவரே தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்பது அவரது நம்பிக்கை.

கோட்டாபாய ராஜபக்ச மற்றும் இராணுவம் சார்பாக சந்திரபிரேம எழுதிய நூலில் புலித் தலைவர் வேலுப்பிள்ள பிரபாகரனின் மரணம் பற்றிய விவரங்களை, அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பாகவே கருத முடியும் என்று அவர் மேலும் கூறுகிறார். ஜனாதிபதியின் மற்றும் அந்த கட்சியின் ஆசியுடன் எழுதப்பட்ட அந்த புத்தகம் பக்கச்சார்பானது என்கிறார் அவர்.

அந்த நூலின் பக்கம் 488 மற்றும் 49 ஆகிய இரண்டு பக்கங்களில் பிரபாகரன் இறந்த விதம் குறித்து பின்வருமாறு உள்ளன.

  • மே 18ம் திகதி மாலை, பானு மற்றும் ஜெயம் தலைமையிலான விடுதலைப் புலி (ஆயுதமேந்திய) உறுப்பினர்கள் குழுவை , 59வது டிவிசனின் இராணுவத்தினர் கண்ட உடனேயே கொன்றுவிடுகின்றனர்.
  • மறுநாள் (19) காலை 800 மீற்றர் நீளமும் 20 மீற்றர் அகலமும் கொண்ட நந்திக்கடல் பகுதியின் கடைசி சதுப்பு நிலப்பகுதிக்கு (Mangrove) 8 பேர் அடங்கிய விசேட அதிரடிப்படையினரின் கீழ் , 4 பேர் அடங்கிய விஜயபா படைப்பிரிவின் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
  • இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையின் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. அங்கு 20 முதல் 30 ஆயுததாரிகள் இருப்பது ரவிப்ரியவுக்கு தெரியவந்தது. உடனே அந்த சதுப்பு நிலப் பகுதிக்கு இன்னும் இரண்டு இராணுவக் குழுக்களை அவர் அனுப்பினார்.
  • அந்தக் குழுவால் மூன்று புலி உறுப்பினர்களைக் கைது செய்ய முடிந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆயுதம் ஏந்திய 30 பேரின் பாதுகாப்புடன் , பிரபாகரன் நந்திகடலின் சதுப்பு நிலப் பகுதியில் இருப்பது தெரியவந்தது.
  • அதே சமயம் இராணுவம் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து நடத்தியது.
  • இறுதியாக, சதுப்புநிலங்களுக்குள் இருந்து வந்த துப்பாக்கிச் சூடு முற்றிலுமாக நின்று போனது.
  • துப்பாக்கி சூடுகள் நிறுத்தப்பட்ட பின்னர், சதுப்பு நிலத்தை ஆய்வு செய்ய ஒரு இராணுவ குழு அங்கே அனுப்பப்பட்டது. அந்த அணியின் தலைவரே பிரபாகரனின் சடலத்தை கண்டுபிடித்தார்.
  • அவரது இறந்த உடல் கண்டு பிடிக்கப்படும் போது சூடாகவே இருந்தது. அதிலிருந்து அவர் சற்று முன்னர்தான் கொல்லப்பட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவரது முகத்தில் தாடி தெளிவாக தெரிந்தது. இறந்த உடலை 4வது விஜயபா குழுவின் வீரர்கள் எடுத்துச் சென்று உயர் அதிகாரிகளிடம் அடையாளம் காண்பதற்காக ஒப்படைத்தனர்.
  • பிரிகேடியர் ஜகத் டயஸ், சவேந்திர சில்வா, கால்லகே, கமல் குணரத்ன ஆகியோர் சடலத்தை பரிசோதனை செய்தனர்.
  • அப்போது, ​​அங்கிருந்த ராணுவ வீரர்கள் முண்டியடித்துக் கொண்டு,  ஒருவர் தோள் மீது ஒருவராக ஏறியே , இறந்த பிரபாகரனின் உடலைப் பார்த்தனர்.
  • அன்று மாலை கொழும்பில் இருந்து விமானம் மூலம் வந்த கருணா அம்மான் மற்றும் தயா மாஸ்டர் ஆகியோர் சடலத்தை பார்த்து இறந்திருப்பது பிரபாகரன்தான் என உறுதிப்படுத்தினர்.

சந்திரபிரேம எழுதிய புத்தகத்தில் உள்ள அந்த விளக்கத்தின் முதல் பத்தியின் கடைசி இரண்டு வாக்கியங்களைப் படியுங்கள்.

இறுதியாக, சதுப்புநிலங்களுக்குள் இருந்து துப்பாக்கிச் சூடு முற்றிலுமாக நின்ற பிறகு, சதுப்பு நிலத்தை ஆய்வு செய்ய அங்கே ஒரு குழு அனுப்பப்பட்டது. அந்த அணியின் தலைவர் பிரபாகரனின் சடலத்தைக் கண்டுபிடித்தார்.

(1) அந்த விளக்கத்தில், பிரபாகரன் சுடப்பட்டதை கண்ணுற்ற எந்தவொரு சாட்சியோ , ஆதாரமோ இல்லை.

(2) பிரபாகரனைச் சுட்டதாக சொல்லும் பெயர் குறிப்பிடாத துப்பாக்கியால் சுடும் வீரர் ,  ஸ்னைப்பர் துப்பாக்கியால் இலக்கை அடையாளம் கண்டு சுட்டதாக எங்கும் , எவரும் குறிப்பிடப்படவில்லை.

(3) அணித் தலைவர் , பிரபாகரனின் இறந்த உடலைக் கண்டுபிடித்தார் என்று மட்டுமே எழுதப்பட்டுள்ள வாக்கியத்தில் கூறப்பட்டுள்ளது.

(4) இறந்த உடல் பிரபாகரனுடையது என DNA மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக நடந்த விசாரணை அல்லது ஆதாரம் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. ஆனால் கருணா அம்மான் மற்றும் தயா மாஸ்டர் இருவரும் சடலத்தை  அடையாளம் காட்டியுள்ளனர். இங்கு ஒரு விசேஷ விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கருணா அம்மான் மற்றும் தயா மாஸ்டர் இருவரும் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏமாற்றம் அடைந்து, வெளியேறிய இருவராவார்கள்.

இராணுவ அதிகாரிகளின் அழுத்தத்திலும்,  மற்றவர்களின் அழுத்தத்திலும் அவர்கள் இருவரும் கிளிப்பிள்ளைகள் போல் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அரசு தரப்பு சொன்னதை சொல்லியிருக்கலாம் என நினைக்க நிறைய வாய்ப்புகள் இருந்தன.

மரணம் ஒன்று சம்பவிப்பதற்கு நான்கு வழிகள் உள்ளன என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு கருத்தாகும். அவை ;

1.இயற்கை,
2.விபத்து,
3.கொலை
4.தற்கொலை

பிரபாகரனின் மரணம் இயற்கை அல்லது தற்செயலான விபத்து வகையின் கீழ் வராது.

இது ஒரு கொலை என்று இலங்கை இராணுவம் அறிவிக்கிறது. 

ஆனால் உண்மைகளை வைத்துப் பார்த்தால் பிரபாகரனின் மரணம் ஒரு தற்கொலைதான். 

இதே போல கொல்லப்பட்ட மௌமர் கடாபி, சே குவேரா ஆகியோரின் மரணத்தை விசாரித்தது போன்று , பிரபாகரனின் மரணம் குறித்தும் விசாரணை நடத்திய சர்வதேசப் புகழ்பெற்ற ஊடகவியலாளருடன் (அவரது பெயரைக் குறிப்பிட விரும்பாத) சச்சி ஸ்ரீகாந்தன் கலந்துரையாடியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் லீ ஆண்டர்சனும் பிரபாகரனின் உடலில் உள்ள காயங்களைப் பார்த்து அது குறித்து தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். சடலத்தின் கைகளில் மாற்றம் இருந்ததைக் அவதானிக்க முடிந்துள்ளது.

அதற்கு காரணம், உடல் நீண்ட நேரம் தண்ணீரில் இருந்ததால் எனக் கருதலாம். பொதுவான மரணத்தில் அப்படி இருக்க முடியாது என்று நினைக்கிறேன்.

அதேபோல அவர் K.C.N. வகை சயனைட்டை அருந்தி இறந்துள்ளார். (Potassium cyanide is a compound with the formula KCN.)

ஆனால் அவர் மரணித்த பின்னரே, அவரது தலையில் சுடப்பட்டுள்ளார்.

அது , அவரை நாங்கள் சுட்டே கொன்றோம் என  அரசு , உலகுக்கு உணர்த்துவதற்காகும். 

சடலம் இல்லாமையால் எதையும் எம்மால் நிரூபிக்க முடியாது. கண்ட காட்சிகளின்படி , உள்ளவை  பிரபாகரன் உயிருடன் இருக்கும்போது எடுக்கப்பட்ட படமா அல்லது இறந்த பின்னர் எடுக்கப்பட்ட படமா என்பதை படங்களில் இருந்து சொல்ல முடியுமா என்பதை நான் அறிய விரும்புகிறேன். ஏனென்றால் நீங்கள் முன்பு சே (சே குவேரா) மற்றும் கடாபியின் இறந்த உடல்களின் படங்களைப் பார்த்து பகுப்பாய்வு செய்துள்ளீர்கள்.

தடயவியல் நிபுணர் பேராசிரியர் கெய்த் சிம்ப்சனைக் கொண்டும் எனது கருத்தை ஆதரிக்க சூழ்நிலை ஆதாரங்களைத் circumstantial evidence தேடலாம்.

(1) பிரபாகரன் உயிருடன் இருக்கும் போதே அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால், துப்பாக்கியால் பிரபாகரனை சுட்ட சிங்கள இராணுவ சிப்பாய் அதை உலகுக்குப் பெருமையாகச் சொல்வதைத் யாராலும் தடுக்க முடியாது. ஆனால் அப்படி ஒருவரும் இதுவரை முன்வந்து சொல்ல முனையவே இல்லை.

(2) பிரபாகரனின் உடலைப் பரிசோதித்த கருணா அம்மான், புலித் தலைவரின் கழுத்தில் இருந்த சயனைட்டைக் காணவில்லை என்று தெரிவித்திருந்தார்.

பிரபாகரனின் சடலத்தின் அங்கங்கள் வாடிப் போயிருந்தன. நோயியல் பேராசிரியர் கீத் சிம்ப்சன் கருத்துப்படி, இது நீரிழப்பு (Dehydration) காரணத்திலாகும்.

பிரபாகரனின் சடலத்தின் உடல் உறுப்புகளில் காணப்பட்ட விசித்திரமான வெளிர் நிறத்தை இலங்கை அரசு இராணுவம் உங்களுக்கு வழங்கியது குறித்து உங்கள் கருத்து என்ன என்று அந்த ஊடகவியலாளரிடம் சச்சி ஸ்ரீகாந்தன் வினவியுள்ளார்.

இறந்த பிறகு, இதயம் இரத்தத்தை பம்ப் செய்வதை நிறுத்துகிறது, எனவே இரத்த நாளங்களில் இரத்தம் நிற்கிறது. சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால், உடலின் ஓரத்தில் உறைந்திருக்க வேண்டிய இரத்தத்தை வைத்தே சொல்லலாம்.

படத்தில் காட்டப்பட்டுள்ள பிரபாகரனின் சடலத்தின் கழுத்துப் பகுதியிலிருந்து உடலின் கீழ் பகுதி வரை நீல நிறம் நிறைந்த ஊதா நீலமாக (Purplish blue)  தெரிகிறது. இந்த நிறமாற்றம் தலை முதல் காது வரை உடலின் மேல் பகுதியில் காண முடிகிறது. இது விவாதத்திற்குரியது.

இவை குறித்து விளக்கமளிக்குமாறு ஊடகவியலாளர் சச்சி ஸ்ரீகாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது, தோலின் நிறம் குறித்து போஸ்ட்மார்ட்டத்தில் எந்த வித்தியாசத்தையும் காண முடியாது. இருப்பினும், இரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இந்த நிலை ஏற்படுகிறது. பொட்டாசியம் சயனைட் நஞ்சினால் அப்படி ஏற்பட வாய்ப்புள்ளது.

சே மற்றும் கேணல் மௌமர் கடாபி ஆகியோரின் சடலங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை ஆராய்ந்தால், இதேபோன்ற வகை மரணங்கள் சம்பவித்த முறையை காணலாம் என்று சசி ஸ்ரீகாந்தன் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான சித்திரவதைகள் ,  கடைசி நேரத்தில் துன்புறுத்தியுள்ளனர் (Tormentors) என தெரியவந்துள்ளது.  மரணத்திற்குப் பின்னர், சித்திரவதை செய்தவர்கள் புகைப்படம் எடுப்பதற்காக இறந்தவர்களது உடலின் மேல் இருந்த ஆடைகளை அகற்றியுள்ளனர்.

சே குவேராவும் இதேபோன்ற விதியை அனுபவிக்க வேண்டியிருந்தது, இறுதியாக அவரது சடலம் அதன் மேல்புறத்தை புகைப்படம் எடுப்பதற்காக சே குவேராவின் மேலிருந்த ஆடைகளை அகற்றியிருந்தார்கள்.

ஆனால் பிரபாகரனின் சடலத்தின் புகைப்படங்கள் இராணுவத்தினரால் எடுக்கப்பட்டது. இது வெவ்வேறு வழிகளில் உள்ளது.

ஆனால், சேகுவேரா, கடாபி போன்று , பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டதை இந்தப் படங்கள் வெளிப்படுத்தவில்லை. 

சந்திரபிரேம தனது நூலில் கூறியுள்ளபடி, புலித் தலைவரின் சடலத்தைக் காண உற்சாகம் பொங்கி இருந்த இராணுவ வீரர்கள் முண்டியடித்துக் கொண்டு ஒருவர் தோள் மேல் ஒருவர் ஏறியே பார்த்துள்ளனர்.

அது புலித்தலைவர் மீது அவர்களுக்குள் இருந்த ஒருவித மரியாதையே காரணம் எனவும், அதனால் அவரது சடலத்தை சிதைக்காமல் (Defile) இருந்ததாகவும், இறந்த எதிரியைக் கூட மதிக்கும் பௌத்த தர்மம் காரணமாகவும் இருக்கலாம் எனவும் சச்சி ஸ்ரீகாந்தா மேலும் கூறுகிறார்.

எனினும், மஹிந்தவின் அரசியல் இமேஜை ஊதிப் பெருக்க வைக்க , மகிந்த ராஜபக்சவின் விசுவாசக் குழுவால் அவை அனைத்தும் நாசமாக்கப்பட்டதாகக் கூறும் சச்சி ஸ்ரீகாந்தன், தமது தலைவரான புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழ் மக்களை அனுமதிக்க விடாமல், பிரபாகரனின் உடலை எரித்து கடலில் தாட்டி அழித்தார் மகிந்த என சச்சி ஸ்ரீகாந்தன் தெரவிக்கிறார்.

இறந்தவரின் உடலை இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் அடக்கம் செய்வது இஸ்லாமிய சமூகத்தில் ஒரு முக்கிய கடமையாகும், ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கர்னல் மவ்மர் கடாபியின் உடலை பல நாட்கள் பிணவறையில் வைத்திருந்ததைக் சுட்டிக் காட்டும் இந்த ஆய்வாளர் (சச்சி) , புத்த மத போதனையில் இறந்தவரது உடலை இத்தனை நாள்தான் வைத்திருக்க வேண்டும் என எந்தவொரு நியதிகளும் இல்லாதபோது, இறந்த பிரபாகரனின் இறுதி நிகழ்வை  செய்ய , ராஜபக்ஸ அரசு ஏன் அவ்வளவு அவசரப்பட்டது என்றும்  கேள்வி எழுப்பியுள்ளார்.

– சந்திரசேன மாரசிங்க


தெற்கின் கருத்து

முப்பது வருடங்களாக முழு இலங்கையையும் ஒடுக்கிய யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் கடந்துவிட்டன.

அந்தப் போரின் கசப்பான நினைவுகள் இன்னும் நம் மனதில் இருந்து மறையவில்லை.

அந்த நேரத்தில், கிராமங்கள், நகரங்கள், விகாரைகள், தேவாலயங்கள், கோவில்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் என நூற்றுக்கணக்கான இடங்களில் இருந்து இதயத்தை உலுக்கும் குண்டுவெடிப்புச் செய்திகள் தொடர்ந்து பதிவாகின.

அதற்கெல்லாம் தலைமை தாங்கிய புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனின் முடிவை  2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி கேள்வியுற்ற மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டதோடு,  யுத்தம் முடிவுக்கு வந்த மகிழ்ச்சியை அனுபவித்தனர்.

சுஜித் விதான பத்திரன

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ள பிரபாகரன் கொல்லப்பட்ட நாள் வரை போர்க்களத்தின் முன்னரங்கில் சுற்றித் திரிந்து, சவாலான போர்ச் செய்திகள் மூலம் ஒவ்வொரு இரவும் எம்மிடம் வந்து , போர் செய்திகளை தந்த ஊடகவியலாளர்களில் சுஜித் விதான பத்திரன முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார்.

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே பயமுறுத்திக் கொண்டிருந்த போருக்கு மத்தியில் நின்று அவர் அச்சமின்றி கொண்டு வந்த போர்ச் செய்திகளை நாடு முழுவதும் உள்ளவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

வனச தொலைக்காட்சியின் யூடியூப் அலைவரிசையின் ஊடகவியலாளர் சஞ்சீவ ரத்நாயக்கவுடன் , சுஜித் விதான பத்திரன நடத்திய கலந்துரையாடலில், புலித் தலைவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்து அவர் இதுவரை ஊடகங்களுக்கு வெளியிடாத பல தகவல்கள் சொல்லியுள்ளார்.

போரின் கடைசி தருணங்களில் அவர் கண்ட அனுபவங்களை வாசகர்களாகிய உங்களிடம் கொண்டு வர நினைத்தோம். இந்த விவாதம் ‘வனச டிவி’ யூடியூப் சேனலில் இருந்து பெறப்பட்டதாகும்.

போரின் இறுதி நாளில் நந்திக்கடலில் நடந்த சம்பவங்களைப் பற்றி இனி பேசலாம்?

போரின் கடைசி நாளை என்றுமே மறக்க முடியாது.

1996-ம் ஆண்டு எனக்கு நினைவிருக்கிறது.

அப்போது நான் எட்டு வயது சிறுவன்.

அன்று பிரதி பாதுகாப்பு அமைச்சராக அனுருத்த ரத்வத்த இருந்தார்.

அப்போதுதான் யாழ்பாணம் கைப்பற்றப்பட்டு இராணுவ கட்டுப்பாட்டுக்கு வந்தது. இது எங்கள் குழந்தைப் பருவத்தின் பெரிய நினைவு. இலங்கையின் போர் வரைபடத்தில், முகமாலையின் பாதுகாப்புக் கோடு  என்பது இலங்கையின் யுத்த பூமிக்கான வரைபடத்தில் அது பிரிக்கும் எல்லைக் கோடாக இருந்தது. புலிகள் , தீபன் தலைமையில் தங்களது படைகளை முன்னிறுத்தி முகமாலையின் முன்னரங்கை பல வருடங்களாகத் தக்க வைத்திருந்தனர்.

முகமாலை முன்னரங்கின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அப்பா எனக்கு போன் செய்து ‘யாழ்ப்பாணத்தை இராணுவம் பிடித்துவிட்டார்களாம்’ என்றார்.

‘பிரபாகரன் இப்போது எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டேன்.

அதற்கு , ‘பிரபாகரன், அவரைச் சுற்றி  300 கண்ணி வெடி அரண்களையும், 300 புலி போராளிகளையும் ,  50 கரும்புலிகளையும் பாதுகாப்புக்காக வைத்துக் கொண்டே அவர் இருக்கிறார். எனவே பிரபாகரனை பிடிக்க முடியாதாம். அத்தனை கண்ணி வெடி அரண்களை வெடிக்க வைத்து, கரும்புலிகளையும் அழித்த பின்தான் பிரபாகரனை கைது செய்ய முடியும்.” என என் அப்பா சொன்னார்.

யாழ்ப்பாணத்தை இராணுவம் பிடித்தாலும் , பிரபாகரன் ஆனையிறவு பக்கம் இருக்கிறாராம். நீங்க ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கே அந்தக் கதையைச் சொன்னேன், அந்த நேரத்தில் அப்பா சொன்ன பழைய கதைதான் ஞாபகத்துக்கு வந்தது.

கடைசி நேரங்களில் போர் களத்தில் மீடியாவுக்குள்ளேயே சண்டை வந்தது, அந்த சேனல் பிரேக்கிங் நியூஸ் போட வேணும், இந்த சேனல்தான் முதலில் ரிப்போர்ட் பண்ண வேணும் என ஒரே போட்டியாக இருந்தது . சமன் குமார ராமவிக்ரமவுக்கு முன், பிரபாகரனின் மரணத்தை எப்படி அறிவிப்பது என்ற கனவு எனக்குள் இருந்தது. போரைப் பற்றி செய்தி சேகரிக்க சென்றவன் என்ற முறையில் எனக்கு அப்படியொரு கனவு வராமல் போகாதே?

எனவே, நீங்கள் கேட்ட போரின் இறுதி நாளுக்கு முன்னைய சில நாட்களாக , பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன அவர்களது தலைமையிலான 53வது டிவிஷனின் முன் அரங்கு பாதுகாப்புப் பிரிவிலிருந்து போர் அறிக்கைகளை அனுப்பிக் கொண்டிருந்தேன். அப்படி இருக்கும் போது, ​​ஜெனரல் கமல் குணரத்னவுக்கு தெரியாமல் ரகசியமாக முன்வரிசைக்கு செல்வேன். அந்த பகுதி முழுவதுமாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனாலும் பிரபாகரன் அங்கு இல்லை. அப்படி ஒரு பிரச்சனை மே 17ஆம் தேதிவரை இருந்தது.

அதிகாலையில், 05வது இராணுவப் படையணியின் மேஜர் ரத்நாயக்க என்னை அழைத்து, ‘இரண்டாவது ஆளை பிடித்துவிட்டோம், உங்களால் வர முடியாதா என்று கேட்டார்.

என்ன சொல்கிறீர்கள்?’ நான், ‘இரண்டாவது ஆளா?’ என்று கேட்டேன்,

‘ஆம், சார்லியை முடித்துவிட்டோம்’ என்றார்.

சார்ல்ஸ் அன்டனி

நான் ஷார்ட்ஸ் அணிந்திருந்தேன். உடனே அப்படியே அங்கு சென்றேன்.
விடுதலைப் புலிகளின் சுமார் 400 உடல்கள் அளவு அங்கு இருந்தன. அது ஒரு பெரும் தாக்குதல். பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆண்டனியோடு பல சக்தி வாய்ந்தவர்களும் அங்கே இறந்து கிடந்தனர்.

 

கிளிநொச்சி, விசுவமடு ஆகிய பகுதிகளின் இழப்புக்குப் பின்னர், புலிகளின் மிகப் பெரிய தோல்வி என்றால் அது புதுக்குடியிருப்பின் இழப்பாகும்.

அவர்களின் அனைத்து சப்ளை லைன்களும் அதனால் முடங்கின.

தீபன், விதுஷா மற்றும் முக்கிய பல புலி உறுப்பினர்களில் அநேகர் புதுக்குடியிருப்புப் போரில் உயிரிழந்தனர். நான் 17 ஆம் தேதி பற்றி பேசுகிறேன்.

மெல்ல மெல்ல நந்திக்கடல் பகுதிவரை வந்த , புலிகள் தங்களது வாகனங்கள் அனைத்தையும் எரித்துவிட்டு, புகை மூட்டங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, தன் வாழ்வில் செய்த பாவங்களுக்கு தண்டனையை செலுத்தினார் பிரபாகரன். நான் சொல்ல வேண்டியது அவ்வளவுதான்.

பிரபாகரன் பதுங்கியிருந்த இடத்துக்கும்,  சார்லஸ் ஆண்டனி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்துக்கும் இடையேயான தூரம் சுமார் 500 மீட்டர்தான்.

பிரபாகரன் தனது மூத்த மகன் சுட்டுக் கொல்லப்படுவதை நேரில் கண்டிருக்க வேண்டும். அப்போது  யார் தோற்றார்கள், யார் வென்றார்கள் என்பதை பிரபாகரனால் ஊகிக்க முடியாமல் இருந்திருக்காது.

அதன் காரணமாக பிரபாகரன் தனது மூத்த மகனும் அவரது குழுவினரும் நந்திக்கடல் பகுதியில் இறந்து கிடப்பதை நேரில் பார்க்க நேர்ந்தது.

நம் நாட்டில் பூனை, நாய் போல ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றதன் இழப்பீட்டை பிரபாகரன் அனுபவிக்க வேண்டியிருந்தது.

பிரபாகரனின் மனைவியும் மகளும் பீரங்கித் தாக்குதலால் கொல்லப்பட்டிருந்தனர். அதையும் பிரபாகரன் பார்த்திருப்பார்.

இறுதியில், ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து நிற்க , ஒரு சிறிய ஏரியின் நடுவில் நின்று கொண்டு, அடுத்து என்ன நடக்குமோ என பிரபாகரனால் காத்திருக்க வேண்டியிருந்தது .

17ம் தேதியும் அப்படியே கடந்து போனது.

சார்லஸ் ஆண்டனி இருந்தால் பிரபாகரனும் அங்கே இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் இருந்தது.

சார்லஸ் ஆண்டனியை விட்டு விட்டு, பிரபாகரன் தப்பிக்க வழியில்லை. அதைத்தவிர சூசையும் இல்லை. பானுவும் இல்லை. பொட்டும் இல்லை, ஜெயமும் இல்லை, ஸ்வர்ணமும் இல்லை, ரமேசும் இல்லை, புலிகளின் முக்கிய சாகாக்கள் எவரும் அங்கு இல்லை.

18ம் திகதி போர்க்களம் அமைதியாகவே இருந்தது.

பிரபாகரன் குறித்த செய்தியை முதலில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்களும் என்னை விட்டு இல்லாமல் போனது. ஏனென்றால் பிரபாகரன் அங்கு காணக்கிடைக்காமையால் தப்பிவிட்டாரோ என எண்ணத் தோன்றியது?

ஆனால், 18ஆம் திகதி நள்ளிரவு 12 மணியளவில், ஏரியின் நடுவில் உள்ள சதுப்புநிலப் பகுதியில், படைத் தளபதி லலந்த கமகேவுக்கு சில வெடி சத்தங்கள் கேட்டன. அங்கே ஏதோ நடக்கிறது என்பதை அவர் உணர்ந்தார். ஆனால் அவரிடம் எவ்வித பதட்டமும் இல்லை, காரணம் சுற்றிலும் இராணுவம் குவிக்கப்பட்டிருந்தது. நாங்கள் பதட்டப்பட அளவு , அவர் பதட்டமாக இல்லை. காரணம், முக்கிய இலக்கு இந்தப் பகுதியில் இருக்கலாம்.

18ம் திகதி இரவு நேர துப்பாக்கி வெடிச் சத்தத்துடன் 19ம் திகதி வெளிச்சம் விழுந்து விடிகிறது.

லலந்த கமகே அவர்கள் அந்தத் தகவலைத் தெரிவிக்காவிட்டாலும், அலெட்லாக இருக்கும் எமக்கு சில தகவல்கள் கிடைக்கின்றன. எனது அனைத்து தொடர்புகளும் முன் அரண்களில் உள்ள போர்வீரர்களுடன்தான் இருந்தன. நான் பெரிய அதிகாரிகளுடன் அதிகமாக தொடர்பில் இல்லை. ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் முன்னரங்கில் உள்ள இராணுவத்தினரிடமிருந்து நான் பெறும் தகவல்கள்தான் எனக்கு மிகவும் முக்கியமானவை.

அன்று அதிகாலை 4 மணியளவில் நந்திக்கடல் பகுதியில் சத்தம் கேட்டது. அங்கு ஏதோ நடக்கிறது என்றும் ஒரு போன் வந்தது.

அதிகாலையில் எழுந்து புதுக்குடியிருப்புச் சந்திக்குச் சென்று திரும்பிக் கொண்டிருக்கும் போது, 8வது அதிரடிப்படையின் தளபதி கேணல் ரவிப்பிரியாவின் கெப் வண்டி, புழுதியை வாரி இறைத்துக் கொண்டு மிக வேகமாக சென்றதை பார்க்க முடிந்தது. நான் எனது சாரதி உபாலி சமரகோனிடம், ரவிப்ரிய சேரின் வண்டியின் பின்னால் தொடர்ந்து செல் என்றேன்.

நந்திக்கடல் பகுதி இடது கரையில், கர்னல் ரவிப்ரிய வண்டியை விட்டு இறங்காமல் , வண்டியிலிருந்து குதிப்பதைக் கண்டேன். நான் அவரைப் பின்தொடர்ந்தேன்.

நந்திக்கடல் பகுதியில் ஏதோ ஒரு சம்பவம் நடந்து உள்ளது. ஜெனரல் குணரத்னவுக்கும் அவரது குழுவினருக்கும் தாக்குதல் செய்ய விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. அந்த பகுதி முழுவதும் 4வது விஜயபா காலாட்படைக்கு கீழ் இருந்தது.

இராணுவம் இப்போது இரண்டு அல்லது மூன்று,  எட்டு பேர் கொண்ட குழுக்களை ஒரு பக்கத்தில் நிறுத்தி, சுற்றிலும் போர் டாங்கிகளை வைத்து, ஏரியின் மீது டாங்கிளால் குண்டு தாக்குதல் ஒன்றை செய்தார்கள்.

கேணல் ரவிப்பிரியவுடன் அவர் இறங்கிய பிரதேசத்தில் இருந்து 4வது விஜயபா காலாட்படையின் தளபதி ரோஹித அலுவிஹாரே மற்றும் படைத் தளபதி லலந்த கமகே ஆகியோருடன் இராணுவக் குழுவொன்று நந்திக்கடல் ஏரி வழியாக இறங்கி, தாக்குதல் தொடுக்கப்பட்ட திசையை நோக்கிச் சென்றார்கள்.

இப்போது அந்தக் குழுவுடன் செல்வதா அல்லது இப்படியே இருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்வதா என நான் முடிவு செய்ய வேண்டிய நேரம் அது.

நான் சமில் ஆனந்திடம் அவர்களை பின் தொடர்ந்து போகலாமா என்று கேட்டேன். அதன் பிறகு, நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விக்கு விடை தேடும் பயணம் தொடங்கியது.

எங்களுக்கு முன்னால் சென்ற இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியபடி முன் சென்று கொண்டிருந்தது. மறுபுறத்திலிருந்து எதிர் திசையாக வந்த இராணுவமும் துப்பாக்கிச் சூடு நடத்தியபடி முன்னால் வந்து கொண்டிருந்தது.

4வது விஜயபா காலாட்படை படைப்பிரிவு நந்திக்கடலின் முல்லைத்தீவு திசையில் இருந்து வந்தது. எட்டு பேர் கொண்ட குழுவொன்றே வந்திருந்தது. நாட்டு மக்களுக்கு பொய் சொல்ல என்னால் முடியாது.

பிரபாகரனை அந்த நேரத்தில் சுட்டுக் கொன்றது இந்த படைவீரன்தான் என என்னால் சொல்ல முடியாது. அது எனக்குத் தெரியாது.

நாங்கள் நந்திக்கடல் பகுதிக்கு வரும் போது 8 பேர் கொண்ட அணிகள் 3 அல்லது 4 வரை , எனக்குத் தெரிந்தவரை, சார்ஜென்ட் நவரத்ன என நினைவு, அத்தகைய பெயர் கொண்ட இராணுவ வீரர் ஒருவர் , அவரது கட்டளை அதிகாரியை அழைத்து, ‘சேர், ஆள் கிடைத்துவிட்டார்’ என்றார். அதே சமயம் ஏரியின் நீரில் யாரையோ இழுத்துக் கொண்டு வருவதும் தெரிந்தது.

நானும் , சமில் ஆனந்தும் அப்பகுதியை நோக்கிச் சென்றோம், அங்கு எனக்கு ஒரு பிரச்சனை இருந்தது, நான் ஒரு பத்திரிகையாளன். எனக்கு இந்த நிகழ்வு மிக முக்கியமானது.

அதனால் உடலை இழுத்துக் கொண்டு வந்தவரிடம், ‘இழுத்துக் கொண்டு போக வேண்டாம், உடல் டெமேஜ் ஆகிடும் , கொஞ்சம் மேலே தூக்கிக் கொண்டு வாங்க ‘ என்றேன்.

அப்போது அங்கிருந்த போர்வீரர்கள் அனைவரும் கடும் கோபமடைந்தனர். ‘இவனை தோளில் கொண்டு வரவா சொல்கிறாய்? ” என்றனர்.

பல ஆண்டுகளாக பெரும் அழிவை ஏற்படுத்திய பயங்கரவாதிதான். ஆனால் இன்னொரு பக்கத்தை சிந்தித்தே அப்படிச் சொன்னேன். அவரை இழுத்துச் சென்று, உடல் சேதமடைந்து , உடலை அடையாளம் காட்டமுடியாமல் போனால், பிரபாகரன் சாகவில்லை என்று நான் முன்பு குறிப்பிட்ட மேற்கத்திய சக்திகள் கூறுவார்கள். அதனால் எனக்கு அது முக்கியமானதாக இருந்தது.

அங்கிருந்த படைத் தளபதியும், கட்டளை அதிகாரியும் கூட நான் சொன்னதைக் கேட்டு, ‘ தூக்கி எடுங்கள், டெமேஜ் ஆகிப் போனால் ஆள் அடையாளம் தெரியாமல் போய்விடும்’ என்றார்கள்.

பிரபாகரன் இறந்த இடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் இருந்த, ஒரு பதுங்கு குழிக்கு மேலே, ஒரு மணல் மூட்டையை வைத்தே, அனைத்து ஊடகங்களிலும் வந்த எனது செய்திகளுக்குமான , ‘ஆன் கேமரா கட்’ பதிவு செய்வேன்.

துப்பாக்கிச் சூட்டுக் காயம் பட்ட பிரபாகரனின் ஒரு கண் வெளியே விழுந்திருந்தது. எனக்கு அந்த கண்ணையும் செய்தியாளர்களது பார்வைக்காக பொருத்தப்பட வேண்டியிருந்தது. நான் கண்ணை உள்ளே வைத்து என் நீல நிற கைக்குட்டையால் பிரபாகரனின் தலையை கட்டினேன். அன்றைய வீடியோ காட்சிகளில் நான் செய்ததை பார்க்கலாம். அவர்  புலிகளின் உடையை அணிந்தே இருந்தார். அவரது ’01’ எனும் குறிச்சொல் தகடு இருந்தது . விடுதலைப் புலிகள் அமைப்பின் அடையாள அட்டையும் இருந்தது.

அவரது கால்சட்டைப் பையில், நீல நிற பேனாவால் எழுதப்பட்ட வெடிமருந்துகளின் பட்டியல் ஒன்று இருந்தது. 04 மோட்டார்கள் மற்றும் 2000 டி.56 ரவுண்டுகள் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

நான் பிரபாகரனின் கண்ணை வைத்து கட்டிவிட்டு , மணல் மூட்டை ஒன்றை தலைக்கு வைக்கும் போதும் , பிரபாகரனின் உடலில் இருந்த சூடு தணிந்திருக்கவில்லை.

எத்தனையோ விஷயங்களை நாங்கள் நேரடியாகப் பார்த்து செய்தியாக்கியிருந்த போதும், பிரபாகரனல்ல , ஒரு விடுதலைப் புலி உறுப்பினர் கூட எங்கள் பாதுகாப்புப் படையின் முன் வரிசை அரணை தாண்டி ஊடுருவ முடியாத சூழ்நிலை இருந்தபோதும் , பிரபாகரன் பனாகொடைக்குக் கொண்டு வரப்பட்டார், கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டார்,  மகிந்த ராஜபக்ச கன்னத்தில் அடித்தார். மீண்டும் கொண்டு வந்துதான் கொன்றார்கள் என்பது போன்ற அம்புலி மாமா புரளி கதைகளை கேட்க முடிகிறது,

பிரபாகரனை பனாகொடைக்கு கொண்டு வந்தது உண்மையா என பலர் என்னிடம் கேட்டனர். நானும் நம் மக்களைப் பற்றி அப்போது கொஞ்சம் அருவருப்பு அடைந்தேன். இது நடக்க எத்தனை உயிர்கள் பலியாகின. இது முன் வரிசையில் இருந்த வீரர்களை குறைத்து மதிப்பிடுவது போன்றது. அவர்கள் பிரபாகரனோடு நேருக்கு நேர் சண்டையிட்டனர்.

கடைசி நாளில், பிரபாகரனைச் சுற்றி 12 கரும்புலிகளின் சடலங்கள் இருந்தன. பிரபாகரன் மற்றும் அந்த 12 பேரின் ஆயுதங்களில் ஒரு தோட்டா கூட மீதமாக இருக்கவில்லை. கடைசி தோட்டா வரை போராடியே அவர்கள் இறந்து விழுந்துள்ளனர். அப்படி  அவர்கள் நேருக்கு நேர் சண்டையிட்டுள்ளனனர்.

பிரேக்கிங் நியூஸைப் பார்ப்பது போல, சோபாவில் அமர்ந்து சில அழகான காட்சிகளை செய்திகளாக பார்ப்பது போல் இவை எதுவுமே அழகானவை இல்லை. அந்த பயங்கரமான அனுபவங்களினூடாக மக்களுக்காக ஓர் அழகிய நாட்டைக் கட்டியெழுப்ப தம்மை அர்ப்பணித்துக் கொண்டார்கள் எமது அழியாத மாவீரர்கள். இன்றைக்கு ஓய்வு பெற்றாலும், பணிபுரிந்தாலும், இறந்தாலும், காயம் அடைந்து, ‘அபிமங்சல’ போன்ற இடத்தில் சிகிச்சை பெற்று வந்தாலும், அவர்கள் இந்நாட்டின் மாவீரர்கள். இதிகாச கதைகளில் நம்மிடையே வீர தீர பலசாலிகள் இருந்ததாக கேள்விப்பட்டுள்ளோம். நந்திக்கடல் பகுதியில், மாங்குளத்தில், வெடத்தல்தீவில், ஜெயபுரம் மற்றும் முல்லைத்தீவு போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கான வீர பராக்கிரம  பலசாலிகளை பார்த்திருக்கிறேன்.

அந்த ராட்சதர்களை விட அதிக வலிமையை இவர்களிடம் கண்டேன். அதனால்தான் அவர்களால்  பிரபாகரனை வெல்ல முடிந்தது, பிரபாகரன் இறந்தார், புலிகள். அமைப்பு முடிந்தது, போர் முடிந்தது என்று சொல்வதை விட, அங்குலம் அங்குலமாக வார்த்தைகளால் சொல்ல முடியாத விசித்திரக் கதைகள் ஆயிரம் இருந்தன. அவற்றை தியாகம் என்று சொல்லமாட்டேன். நான் நினைப்பது தைரியம். ஆனால் அது ஒரு மனிதனின் தைரியத்தை விட  வேறுபட்டது. குளிர்பான பாட்டில் மூடிகள் சிந்திக் கிடப்பது போல் தரையில் கிடக்கும் பட்டாக்களை (கண்ணி வெடிகளை ) கண்ணால் பார்த்துக் கொண்டு , தாண்டி புலிகள் பகுதிக்குச் செல்லும் தைரியம் எனக்கு இல்லை.

ஆனால் எமது போர்வீரர்கள் போனார்கள். அதனால்தான் நந்திக்கடலில் இந்த போர் முடிவுக்கு வந்தது. எனவே, மே 19 அன்று பிரபாகரன் இறந்தார். நாம் கொடியேற்றினோம் என்பதைத் தாண்டிய ஒரு கதை நம் மக்கள் மனதில் எழுதப்பட வேண்டும். அது மகாவம்சத்தில் எழுதப்பட்டிருந்து என சொல்லி பிரயோசனமில்லை. உயிருடன் இருக்கும் ஒவ்வொருவரும், புதிதாகப் பிறக்கும் ஒவ்வொருவரும் இதை எப்படிப் பெற்றோம் என்பது குறித்து அறிந்திருக்க வேண்டும். இது அப்படிப்பட்ட ஒரு தியாகம் .

அதுதான் பிரபாகரனின் முடிவு நிகழ்ந்த நாள். கடைசி குண்டு வரை அவர் போராடினார். சுற்றி வளைக்கப்பட்ட இராணுவத்தை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவரது மகன் இறப்பதை நேரில் காண வேண்டி வந்தது. சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட கிளிநொச்சிக்கு வருமாறு கூறிய போது, ​​நான் தனித்தே வருவேன் என கூறிய பிரபாகரன் நந்திக்கடல் பகுதியில் செத்து மடிந்தார்.

பிரபாகரன் தன்னைக் காத்த, தனக்கு உணவளித்த, இராணுவத்தின் பக்கம் போக எத்தணித்த தனது சொந்த தமிழ் மக்களையே சுட்டார்.

நான் , ஒரு 80 வயது வயோதிபரை சந்தித்தேன், அவருடைய பின்புறம் முழுவதுமாக வெடிப்பட்டு துண்டாகியிருந்தது. தப்பி வரும் போது சுட்டிருக்கிறார்கள். மேலும் ஒருவரின் அக்குளுக்குள்ளாக குண்டு துளைத்த நிலையில், அவரது குழந்தைக்கு சூடுபட்டு குழந்தை இறந்து போனதாகவும், குழந்தையை காட்டில் புதைத்து விட்டு வந்ததாகவும் அவர் என்னிடம் சொன்னார். பட்டாச்சாராக்களையும் நேரில் பார்க்க முடிந்தது. இங்கிருந்து இருவரும் தப்ப முயற்சி செய்வோம் , தப்பும் ஒருவர் பிள்ளைகளை பார்த்துக் கொள்வோம்  எனப் பேசி  வந்திருந்தனர், உயிருடன் தப்புபவர் இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொள்வோம் என்பது அவர்களது முயற்சி. ஆம் அதுபோலவே நடந்துவிட்டது.

தாய் இறந்துவிட்டார், அப்பா இரண்டு குழந்தைகளுடன் இராணுவம் உள்ள பகுதிக்கு வந்து சேர்ந்தார். அதனால்தான் பிரபாகரனின் மிருகத்தனத்தை இந்த அளவுக்கு மட்டுப்படுத்த முடியாது என்றேன்.

இப்போது 11 வயது சிறுவனுக்கு நடந்த போர் பற்றி தெரியாது. அன்று 10 வயதாக இருந்த ஒருவருக்கு இப்போது 21 வயது. அவரும் போரை அதிகம் அனுபவிக்க மாட்டார். துட்டகைமுணு மன்னர் யார் என்று கேட்டால் தெரியாதவர் இல்லை. துட்டகைமுணு மன்னர் இன்று இல்லை.

ஆனால் அவர் அழியாதவர். மக்கள் இறக்கிறார்கள். வீரம் என்றும் அழியாது. எனவே, 2009 மே 19 அன்று பிரபாகரன் கொல்லப்பட்டது மட்டுமல்ல, பொன்னான வாய்ப்பும் கூட. கொப்பேகடுவ, விஜய விமலரத்ன உள்ளிட்ட அனைத்துப் போர்வீரர்களும்,  30 வருடகால மோசமான யுத்தம் இருந்தும் அவர்கள் மல்வத்து ஓயாவுக்கு  வர அனுமதிக்காததால்தான் பிரபாகரன் அதுவரை வரவில்லை. அதனால்தான் நந்திக்கடலில் போர் முடிவுக்கு வந்தது, அதுவே மிகப்பெரிய வெற்றியாகும், ஆனால் கூறப்பட்ட அனைத்து தியாகங்கள் மே 19, 2009 அன்று பலனைத் தந்தது. எனவே, அவர்கள் செய்த தியாகங்கள் மக்களின் இதயங்களில் என்றும் அழியாது.

சானக லியனகே
தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.