மல்யுத்த வீரர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம்

டெல்லியில் நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீரர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழா நேற்று நடைபெற்ற நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்லத் தொடங்கினர். அவர்களை தடுத்து நிறுத்திய டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்தது.

இதுதொடர்பாக ட்விட்டரில் வீடியோ பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, முடிசூட்டு விழா முடிவடைந்த நிலையில், வீதிகளில் பொதுமக்களின் குரல் நசுக்கப்படுவதாக விமர்சித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்தியவர்களை இழுத்துச் சென்றும், தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுவதாகவும் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவரையே புறந்தள்ளியும், அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு ஆளாகியும் திறப்புவிழா நாளில் அராஜகம் அரங்கேறுவதுதான் அறமா? எனவும் முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டதாகவும், அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தனது ட்விட்டர் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.