எதிர்க்கட்சிகளின் இலவச அறிவிப்புகளை நம்ப வேண்டாம் – பிரதமர் மோடி

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களை நம்ப வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் ஷாதோல் மாவட்டத்தில், புதிய சுகாதாரத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், காங்கிரஸ் உள்ளிட்ட வாரிசு அரசியலை மையமாக கொண்ட கட்சிகள், மக்களை கவர்வதற்கு போலி வாக்குறுதிகளை அளிப்பதாக கூறினார். இலவச மின்சாரம், கட்டணமில்லா பேருந்து வசதி போன்ற வாக்குறுதிகள் ஏமாற்று வேலை என்று பிரதமர் மோடி விமர்சித்தார்.

தொழில்துறை மற்றும் வணிகத்தை பாழாக்கும் வகையில், எதிர்க்கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதாக பிரதமர் மோடி சாடினார். மேலும், பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்து பேசிய பிரதமர், ஊழல் வழக்கில் பிணை பெற்றவர்கள், முறைகேடு குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்தவர்களுடன் கை கோர்த்து இருப்பதாக விமர்சித்தார்.

மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் முன்னதாக நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் மூத்ததலைவர் ராகுல்காந்தி, ஐக்கிய ஜனதா தளகட்சித் தலைவர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தாபானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 20 கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்திற்குப் பின்பு கட்சித் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். தேச நலனை பாதுகாப்பதற்காக இந்த முன்னெடுப்பு அவசியம் என்று நிதிஷ் குமார் தெரிவித்தார். மத்தியில் ஆளும் பாஜக அரசு தேச நலனுக்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டினார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை நல்ல விளைவைத் தரும் என்று தெரிவித்த ராகுல் காந்தி, எதிர்வரும் ஆலோசனைக் கூட்டத்தில் ஆழமாக அது விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது தொடர்ச்சியான செயல்முறை என்றும் இங்கிருந்து தொடங்கி முன்னேறும் என்றும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.