காணாமல் போன டென்மார்க் பெண்ணின் சடலம் , அலகல்ல மலையடிவாரத்தில் …

கண்டிக்கு விஜயம் மேற்கொண்டு நான்கு நாட்களாக காணாமற் போயிருந்த டென்மார்க் பெண்ணின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

கடுகன்னாவ அலகல்ல மலையில் நடந்து சென்ற போதே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர் கடந்த மாதம் 26ஆம் திகதி இலங்கைக்கு வந்து தனியாக பயணித்துக் கொண்டிருந்தார். அவர் தனது விஜயத்தின் போது கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 09) அங்கும்புர பேக் பேக்கர்ஸ் விடுதியில் தங்கியிருந்தார். திங்கட்கிழமை (10) நடைபயிற்சி செல்வதாக கூறிவிட்டு பிக்மீ வாகனமொன்றில் ஏறி அலகல்ல பகுதிக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் நேற்று (13) வரை அவர் விடுதிக்கு திரும்பாததால் விடுதியின் முகாமையாளர் கண்டி சுற்றுலா பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்து, இந்த யுவதி விடுதிக்கு திரும்பவில்லை எனவும் 03 நாட்களாகியும் எவ்வித தகவலும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று காலை அலகல்ல பிரதேசத்தில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.